பதிவு செய்த நாள்
09
பிப்
2012
02:02
தமிழகத்தில் முதுமலை காட்டில் யானைகளுக்கு ஒன்றரை மாத காலம் புத்துணர்வு முகாம் நடந்தது. இந் நிலையில் அறநிலையத்துறை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர் முதல் அனைத்து தரப்பட்ட திருக்கோயில் பணியாளர்களுக்கு அரசு சார்பில் இரண்டு நாட்கள் மனிதநேய பயிற்சி நடந்தது. கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம் ஊழியர்கள் நடந்து கொள்ளும் முறை, மனிதநேயத்துடன் செயல்படுவது எப்படி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்களுக்கு அதில் விளக்கப்பட்டது.இது தவிர கோயில்களில் பூஜை காரியங்களில் ஈடுபடும் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டாச்சாரியார்கள் போ ன்ற அனைவரும் ஆகம விதிகள் உள்ளிட்ட அனைத்து விதிகளும் முறையாக தெரிந்திருக்க வேண்டும்.
இறைவனுக்கு பூஜை செய்யக் கூடிய அனைவரும் இதனை முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு 6 வார காலம் புத்தொளி பயிற்சி என்னும் புதிய பயிற்சியை தமிழகம் முழுவதும் நடத்துவதற்கு அறநிலையத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.சைவ திருத்தலங்களில் உள்ள அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு தனியாகவும், வைணவதிருத்தலங்களில் உள்ள பட்டாச்சாரியார்களுக்கு தனியாகவும் புத்தொளி பயிற்சியினை வெவ்வேறு இடங்களில் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. கோயில் அன்றாட பூஜை பணிகள் பாதிக்காத வகையில் தினமும் 2 மணி நேரம் மதியம் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை புத்தொழி பயிற்சியினை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 25 கோயில்களில் இதற்கான பயிற்சி இன்று துவங்கி 6 வாரங்கள் நடக்கிறது .தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோயில் (சிவன்கோயில்), நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமலையான் கோயில் ஆகிய கோயில்கள் உட்பட மாநிலத்தில் 25 கோயில்களில் புத்தொளி பயிற்சி நடக்கிறது.பயிற்சி ஆசிரியர்களுக்கு சம்பளமாக 6 வாரத்திற்கு 4 ஆயிரத்து 500 ரூபாயும், அர்ச்சகர்களுக்கு தினமும் 50 ரூபாய் படியும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வைச, வைணவ சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்கள் அறிந்த வாத்தியார்களை ஆசிரியர்களாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் தேர்வு செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சிவன் கோயில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பங்கு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
இன்று துவங்கும் பயிற்சியினை அறநிலையத்துறை உதவி ஆணையர் வீரராஜன் துவக்கி வைக்கிறார். தூத்துக்குடி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.சைவ திருத்தலங்களில் உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுக்கு வேதபாராயணம் மற்றும் ஆகமம், ஆகமம், சில்பசாஸ்திரம், சைவதிருமறை, திவ்வியபிரபந்தம் ஆகியவை பற்றியும், வைணவ திருத்தலங்களில் உள்ள பட்டாச்சாரியார்களுக்கு வைகாண ஆகமம், பாஞ்சராத்திர ஆகமம், திவ்வியபிரபந்தம், சில்பசாஸ்திரம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியை பெற்ற இவர்கள் அனைத்து விபரங்களையும் தெரிந்து கொண்ட அர்ச்சகர்களாக கோயில்களில் வலம் வரவேண்டும். பூஜை முறைகள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இறைவனுக்கு சிறப்பான ஆகம விதிகளின் படி பூஜைகள் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.