பதிவு செய்த நாள்
10
பிப்
2012
11:02
திருவனந்தபுரம் : பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் வைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி, வரும் 20ம் தேதி துவங்குகிறது என, மதிப்பீடு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வேலாயுதன் நாயர் தெரிவித்தார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, பிரசித்திபெற்ற பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை கணக்கிட்டு மதிப்பீடு செய்ய, சுப்ரீம் கோர்ட் மதிப்பீடு குழுவை நியமித்துள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக, பேராசிரியர் வேலாயுதன் நாயரை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இக்குழு கோவில் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய திருவனந்தபுரம் வந்துள்ளது. இதற்கான பணிகளை துவக்குவதற்கு முன், அதிநவீன கேமராக்கள் உட்பட பல்வேறு உபகரணங்களை பெற முடிவு செய்தது. இப்பணியை, கேரள மின்னணு நிறுவனத்திடம் (கெல்ட்ரான்) ஒப்படைத்தது. அக்கருவிகள் பெறப்பட்ட நிலையில், நேற்று காலை கோவிலில், அக்கருவிகளைக் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து மதிப்பீடு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வேலாயுதன் நாயர் கூறியதாவது: பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட கருவிகள் பெறப்பட்டுள்ளன. இதற்காக, எங்களுக்குத் தேவைப்படும் பெரும்பாலான கருவிகளை கெல்ட்ரான் வழங்கி உள்ளது. அக்கருவிகள் துல்லியமான மதிப்பீடு பணிகளுக்கு பயன்படுமா, இல்லையா என்பது குறித்து ஆராய, இன்று கோவிலில் பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இக்கருவிகளை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பது குறித்தான தொழில்நுட்ப விளக்கங்கள் ஏற்கனவே எங்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இப்பணிக்காக, கோவில் பாதாள அறைகளை திறக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்கு பதிலாக, அதேபோன்ற வேறு ஆபரணங்களை வைத்து, புதிய கருவிகளை கொண்டு பல்வேறு நிலைகளில் பரிசோதிக்கப்பட்டது. இன்று நடத்தப்பட்ட பரிசோதனை குறித்தான முழு விளக்க அறிக்கை, வரும் 15ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். அதன்பின் வரும் 20ம் தேதி கோவிலில் மதிப்பீடு பணிகள் துவங்கும். இதில், தற்போதுள்ள குழுவினருடன், மேலும், மூன்று தொழில்நுட்ப வல்லுனர்கள் இடம்பெற உள்ளனர். பொக்கிஷங்களை பாதாள அறைகளில் இருந்து வெளியே எடுத்து மதிப்பீடு செய்யும் பணி துவங்கினால், எக்காரணத்தை கொண்டும் நிறுத்தாமல், பணிகள் அனைத்தையும் முடிக்கவேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது கோவிலில் தேவ பிரசன்னத்தில் கூறப்பட்டதுபோல், பரிகார பூஜைகள் நடந்து வருவதால், மதிப்பீடு செய்யும் பணிகளை 20ம் தேதி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வேலாயுதன் நாயர் தெரிவித்தார்.