பதிவு செய்த நாள்
10
பிப்
2012
11:02
ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த மாதம், 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 5ம் தேதி மயான பூஜையும், 6ம் தேதி சக்தி கும்பஸ்தாபனமும், மகா பூஜையும் நடந்தன. நேற்றுமுன் தினம், உற்சவர் மாசாணியம்மன் சித்திரைத் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஆனைமலை நகரப் பகுதியில், சித்திரைத் தேர் வீதியுலா வந்து, குண்டம் அருகில் தேர் நிறுத்தப்பட்டது. தலைமை முறைதாரர் மனோகரன், அம்மன் அருளாளி குப்புச்சாமி, மயான அருளாளி அருண் ஆகியோர், அம்மன் சூலத்துடன் கோவிலை வலம் வந்து, குண்டம் இறங்கும் இடத்திற்குச் சென்றனர். காலை 9.00 மணிக்கு, குண்டம் விழா துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர். பின்னர், அம்மனின் சித்திரைத் தேர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.