பதிவு செய்த நாள்
27
அக்
2018
11:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின்போது, கோவிலுக்குள், 7,500 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா, நவ., 14ல் கொடியேற்றத்துடன் துவங்கி, தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கிறது. நிறைவாக, 23ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படும். பரணி தீபத்துக்கு அதிகபட்சம், 2,500, மகா தீபத்துக்கு, 5,000 என மொத்தம், 7,500 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிப்பது என, முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக, போலீஸ் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு, 25 சதவீதம் பக்தர்கள் எண்ணிக்கை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் தவிர்ப்பு போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. அதேபோல், ஆன்லைனில், 500 – 600
ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் விற்பனை எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது. பரணி தீபம், மகா தீபத்தரி சனத்தை நேரடியாக அகன்ற திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் மாற்று ஏற்பாடு என்ற பெயரில், ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை, பக்தர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. - நமது நிருபர் -