பதிவு செய்த நாள்
27
அக்
2018
11:10
காஞ்சிபுரம்: ஏகாம்பரேஸ்வரர் கோவில் புதிய உற்சவர் சிலையை, கும்பகோணத்திற்கு போலீசார் கொண்டு சென்றதால், அடுத்து வரும் உற்சவங்களுக்கு, மிக பழமையான உற்சவர் சிலைகளை தயார்படுத்த வேண்டும்’ என, பக்தர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் பழைமையான ஏகாம்பரநாதர் கோவிலில் ஏற்கனவே இருந்த பழைய உற்சவர் சிலை சேதம் அடைந்ததாக கூறி, அதற்கு பதில் புதிய சிலை, 2015ல் செய்யப்பட்டது. இந்த சிலையில், 5.75 கிலோ தங்கம் சேர்க்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், தங்கம் சேர்க்கப்படாமல் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு புகார் குறித்து, காஞ்சிபுரத்தை சேர்ந்த, அண்ணாமலை என்பவர், சிவகாஞ்சிபோலீசில் புகார் அளித்தார். ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வழக்குப்பதிவு செய்யக்கோரி, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், சிவகாஞ்சி போலீசில், ஏகாம்பரேஸ்வரர் கோவில் புதிய உற்சவம் சிலை முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடனடியாக, இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டது.
கோவில் செயல் அலுவலர், தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்து வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் காலை, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து, புதியதாக செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் உற்சவம் சிலையும், ஏலவார்குழலியம்மன் சிலைகளையும், நேற்று முன்தினம் கும்பகோணம் எடுத்து சென்றனர். அங்கு, நீதிபதி முன் ஆஜர்படுத்தி, சிலை பாதுகாப்பு அறையில் வைத்து உள்ளனர். மிக பழமையான ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், உற்சவர் சிலை தொடர்பான பிரச்னை தொடர்ந்து நிலவி வரும் நிலையில், பக்தர்கள் பலருக்கும் கவலை அளித்து வருகிறது. புதிய உற்சவர் சிலைகளை, போலீசார் எடுத்து சென்றதால், ஆயிரம் ஆண்டு பழமையான உற்சவர் சிலையை, மீண்டும் பக்தர்கள் வழிபாட்டுக்கு கோவிலில் வைத்து உள்ளனர்.மீ ண்டும் பழமையான உற்சவர் சிலை, வழிபாட்டுக்கு வந்ததால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிலை முறைகேடு வழக்கு முடியும் வரை, புதிய உற்சவர் சிலை, கோவிலுக்கு திரும்ப சில ஆண்டுகள் ஆகும் என, கருதப்படுகிறது.
எனவே, சேதமடைந்த பழமையான உற்சவர் சிலைக்கு, ‘ஜடிபந்தனம்’ எனப்படும், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஜடிபந்தனம் மேற்கொண்டால், உற்சவர் சிலைகளை, அடுத்தடுத்து வரும் உற்சவங்களுக்கு தயார்படுத்தலாம். அதற்கு தேவையான சிறப்பு அபிஷேகங்களை செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இன்னும் சில நாட்களில், தீபாவளி உற்சவம் நடைபெறவுள்ளது, அடுத்த இரு மாதங்களில், பார் வேட்டை உற்சவம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து, பங்குனி உத்திர பெருவிழா என, தொடர்ந்து உற்சவங்கள் நடைபெறவுள்ளன. பழமையான உற்சவர் சிலைகளை பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு, உற்சவங்களுக்கு தயார் படுத்த வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.