பதிவு செய்த நாள்
28
அக்
2018
02:10
திருப்பூர்:திருப்பூரை அடுத்த, பொங்குபாளையத்தில், 118 ஆண்டு பழமையான ஓலைச்சுவடிகளை, வீரராஜேந்திரன் தொல்லி யல் ஆய்வு மையம் படியெடுத்து வருகிறது.
திருப்பூர் அருகே பொங்கு பாளையத்தில், திண்ணை பள்ளி ஆசிரியராக இருந் தவர் அமாசை வாத்தியார் சுவாமி. இவர், 1862ல் பிறந்து, கல்வி ஞானம் பெற்று, திண்ணைப்பள்ளி நடத்தி வந்துள்ளார்.திண்ணை ஆசிரியர் அமாசை வாத்தியார் சுவாமியின் பூர்வீக வீட்டில், கட்டுக்கட்டாக, பழைய ஓலைச்சுவடிகள் இருந்துள்ளன. இது குறித்து அறிந்த, வீரராஜேந்திரன் தொல்லியல் ஆய்வு மைய நிர்வாகிகள், ஓலைச்சுவடிகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.ஓலைச்சுவடிகளை, மூலிகை எண்ணெய் பூசி துாய்மைப்படுத்தி, படியெடுக்கும் பணி நடந்து வருகிறது. கொங்கு வரலாற்று ஆய்வாளர் பொன்னரசு தலைமையிலான குழுவினர், பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகளை படியெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வீரராஜேந்திரன் தொல்லியல் ஆய்வு மைய செயலாளர் சுந்தரகணேசன் கூறியதாவது:வாத்தியார் சுவாமியின், கொள்ளுப்பேரன் காளீஸ்வரன், சகோதரர் பேரன் சண்முகம் ஆகியோர், பொக்கிஷம் போல் பாதுகாத்து வந்த ஓலைச்சுவடிகளை அளித்தனர். அவை படியெடுத்து, சிடிகளாக மாற்றி வைக்கப்படும்.
மருத்துவ குறிப்பு, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் புராணம், மந்திர சக்கரம், பழம் பாடல்கள் என, மொத்தம், 18 ஓலைச்சுவடி கட்டுகள் பெறப்பட்டன. மேலும், இளையான்குடி கவிராயர், 340 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்கள் அடங்கிய ஓட்டுச்சுவடிகளும் உள்ளன.இவ்வாறு, 118 ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஓலைச்சுவடிகளில் உள்ள, அரிய தகவல்கள், பாடல்கள், மந்திர சக்கரங்களை துல்லியமாக எடுத்து, தனித்தனி புத்தகங்களாக தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர் தெரி வித்தார்.