ஸ்வாமிகளுக்கு குருவாயூரப்பனிடம் அளவு கடந்த பக்தி, என்பது கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களிலிருந்து நன்கு தெளிவாகும்
அவருடைய 20 வது வயதில் 1950ல் திருச்சியில் தகப்பனாருடன் இருந்த வந்த போது ஒரு பெரியவர் அவர்கள் வீட்டிற்கு வந்து ஸ்ரீமத் நாராயணீயத்தில் ஒரு ச்லோகத்தை (5வது தசகம், கடைசீ ச்லோகம்) நம் ஸ்வாமிகளிடம் சொல்லி இதை ஜபித்து வந்தால் சரீர அசவுகர்யங்கள் நீங்கும் என்று சொல்லி விட்டுச் சென்றார். அதன் பிறகு அந்தப் பெரியவர் காணப்படவில்லை. 1951ல் சென்னைக்கு வந்த பிறகு இந்த ச்லோகத்துடன் ஸ்ரீமந் நாரயணீயத்தில் வேறு சில ச்லோகங்களையும் (தனியாக சில தசகங்கள் மட்டும் அச்சில் வந்தது) பாராயணம் செய்து வந்தார். 1956ல் ஸ்ரீமன் நாராயணீய புஸ்தகம் அவருக்குக் கிடைத்தது அதன் பிறகு நியமமாக தினம் ஸ்ரீமந் நாராயணீயத்தைப் பாராயணம் செய்து வந்தார்.
விவாஹம் ஆனபிறகு, 1956ல் ஒரு சமயம் வயிற்று வலி அதிகமாக போய் டாக்டரிடம் காண்பித்ததில் உடனே மறுநாள் ஆபிரேஷன் செய்வது தான் நல்லது என்று சொல்லிவிட்டார். ஸ்வாமிகள் அன்றிரவு முழுவதும் வயிற்று வலியுடன் மந் நாராயணீயத்தின் 8வது தசகம் கடைசி ச்லோகத்தை சொல்லிக் கொண்டே குருவாயூரப்பனைப் பிரார்த்தித்துக் கொண்டே இருந்து விட்டு மறுநாள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் வயிற்றை சோதித்துப் பார்த்ததில் ஆபரேஷன் தேவையில்லை, சாதாரணமாகவே குணமாகிவிடும் என்று சொல்லிவிடடு ‘நீங்கள் நேற்று போனதிலிருந்து என்ன செய்தீர்கள்? இந்த மாதிரி ஒரு மாறுதலை நான் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு (Mடிணூச்ஞிடூஞு!.) பகவானின் கிருபையால் தான் நடந்திருக்க வேண்டும்!’ என்று சொன்னார். ஸ்வாமிகள், இரவு முழுவதும் ஸ்ரீமந் நாராயணீய ச்லோகத்தை சொல்லிக் கொண்டிருந்து குருவாயூரப்பனை பிரார்த்திதுக் கொண்டிருந்ததை தெரிவித்ததும் டாக்டர் நம் ஸ்வாமிகளை நமஸ்காரம் செய்து விட்டு ‘நீங்கள் ஒரு மகானாக எனக்கு தெரிகிறீர்கள்’ என்று சொல்லி, தன் மனைவி, குடும்பத்தில் இருந்த எல்லோரையும், நமஸ்காரம் செய்யச் சொல்லிப் பழங்களுடன் காணிக்கைகளையும் வைத்து மரியாதை செய்து அனுப்பினார்.
இதிலிருந்து எப்போதும் தனது மூச்சுக் காற்றைப் போல் ஸ்ரீமந் நாராயணீய புஸ்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆபீஸிலும், ஏனைய இடங்களிலும் பாராயணம் செய்து வந்தார். தன்னிடம் யார் எப்போதும் பார்க்க வந்தாலும் அவர்களுக்காக ஸ்ரீமந் நாராயணீயத்தில் ஒரு தசகம் சொல்லும் வழக்கத்தைப் பின்பற்றினார்.
1963ல் முதல் தடவையாக சில திருவல்லிக்கேணி பக்தர்களுடன் குருவாயூருக்குச் சென்று அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து ஸ்வாமி தரிசனம் செய்து அங்குள்ள மண்டபத்தில் காலை, மாலை வேளைகளில் ஸ்ரீமந் நாராயணீயத்தின் எல்லா ச்லோகங்களையும் சொல்லி ப்ரவசனமும் செய்தார். இப்ப்ரவசனத்தை செவி மடுத்த சுமார் 60 கேரள பக்தர்கள் இந்த மாதிரி அர்த்தங்களை தாங்கள் கேட்டதில்லை என்றும் ஸ்வாமிகளின் ப்ரவசனம் குருவாயூரப்பன் பக்தியை மேலும் வளர்க்கும்படி இருந்தது என்றும் சிலாகித்தார்கள்.
நம் ஸ்வாமிகள் 1963 லிருந்து 2000 வது வருஷம் வரை குருவாயூர் க்ஷேத்திரத்திற்கு ஒவ்வொரு வருஷமும் குறைந்தது 3, 4 தடவைகள் சென்று நிறைய நாட்கள் தங்கி பகவத் தரிசனம் செய்து கொண்டு சுமார் 100 தடவைகள் ஸ்ரீமத் பாகவத பாராயணமும், கணகில்லாமல் ஸ்ரீமந் நாராயணீய பாராயணமும் செய்திருக்கிறார். 2000 ஜூன் முதல் தேதி குருவாயூர் கோயிலில் உதயாஸ்தமன பூஜையும் செய்திருக்கிறார்.