பதிவு செய்த நாள்
29
அக்
2018
03:10
ஸ்வாமிகள் குருவாயூரப்பனிடம் அபார பக்தியுடன் ஸ்ரீமந் நாராயணீயத்தை கணக்கில் அடங்காத தடவைகள் தன் வாழ் நாள் முழுவதும் பாராயணம் செய்து வந்து தன்னிடம் வரும் பக்தர்களுக்கும் நாராயணீய பாராயணத்தின் பெருமைகளை சொல்லி அனுக்ரஹம் செய்வது வழக்கம். ஸ்ரீஸ்வாமிகள் அவர்களுக்கு ஸ்ரீமந் நாராயணீயம் மூச்சு காற்று போல்.
ஸ்வாமிகள் ஸ்ரீமந் நாராயணீயத்தைப் பற்றி அவர் கைப்பட எழுதியது கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
குருவாயூரப்பனுடைய
பரம கீர்த்தியானது
நாராயணீயம் மூலமாக
பிரகாசிக்கிறது, இந்த
நாராயணீய ஸ்தோத்ரமாறு
ஸம்ஸாரஸாகரத்தில்
உழன்று தவித்து உருகும்
அடியார்களுடைய இதய
தாபத்தைத் தணித்து,
உள்ளம் குளிரச்செய்யும்,
ஞான சுடரொளி வீசவும்
செய்து பவ பிணிக்கோர்
அருமருந்தாக விளங்கி
மன அமைதியையும்
தரக்கூடிய சீரிய நூலாகும்.
எந்தவிதமான க்லேச நிவர்த்திக்கும் எந்த விதமான அபீஷ்ட சித்திக்கும் ‘ஸ்ரீமந் நாராயணீயம்’ என்று ஸ்வாமிகள் அடிக்கடி சொல்லுவார்கள்.
1. ஸ்ரீநாராயண பட்டஸ்ய கவே: அதி மனோஹரம்
நாராயணீயம் இதி யத் ஸ்தோத்ரம் ஜயதி பாவனம்
2. ‘பீதாம்பரம் கரவிராஜித சங்கசக்ர
கௌமோதகீஸரஸிஜம் கருணாஸமுத்ரம்
ராதாஸஹாயம் அதிஸுந்தரமந்தஹாஸம்
வாதாலயேஸமனிஸம் ஹ்ருதி பாவயாமி’
நாராயண பட்டத்ரி மேல் உள்ள முதல் ச்லோகத்தையும், குருவாயூரப்பன் மேலுள்ள 2வது ச்லோகத்தையும், ஸ்ரீமந் நாராயணீய ஸ்தோத்ரத்தை படிக்க ஆரம்பிக்குமுன் சொல்ல வேண்டும் என்று ஸ்வாமிகளால் அனுக்ரஹிக்கப்பட்டது.
ஸ்ரீமந் நாராயணீய ஸ்தோத்திரத்தின் தனிப்பெருமை என்னவென்றால் ஒவ்வொரு ச்லோகத்திலும் பட்டத்ரி குருவாயூரப்பனை ஒரு வார்த்தையிலாவது பாராயணம் செய்யும் பக்தர்களைக் கண்டிப்பாக அடிக்கடி குருவாயூரப்பனை ஸ்மரிக்கும்படி செய்கிறார். பகவானை ஒரு தடவை மனதில் ஸ்மரித்தால் 6 மாதங்கள் உபவாசம் இருந்த பலன் கிடைக்கும் என்று மஹான்கள் கூறியிருப்பதால் இந்தப் புண்ணிய பலன் நமக்கு ஸ்ரீமந் நாராயணீய பாராயணத்தின் மூலமாக மஹான்களின் அனுக்கிரஹத்தால் மிகச் சுலபமாகக் கிடைக்கிறது.
பட்டத்ரி தினம் ஒரு தசகம் வீதம் 100 நாட்களில் ஸ்ரீமந் நாராயணீயத்தை கார்த்திகை மாதம் 28ம் தேதி பூர்த்தி செய்ததால் (டிஸம்பர் 1587ல்) நாம் எல்லோரும் தினம் ஒரு தசகம் பட்டத்ரியை மனதில் நினைத்துக் கொண்டு கார்த்திகை 28ம் தேதியன்று பூர்த்தியடையும்படி படிப்பது மிகுந்த விசேஷம். கார்த்திகை 28ம் தேதியை குருவாயூரில் ஸ்ரீமந் நாராயணீய தினம் (குருவாயூரப்பன் பட்டத்ரிக்கு தரிசனம் கொடுத்த தினம்) என்று கொண்டாடுவது வழக்கம். சாதாரணமாக ஒவ்வொரு வருஷமும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி அல்லது 6ம் தேதி ஆரம்பித்து டிஸம்பர் 13ம் தேதி அல்லது 14ம் தேதி (கார்த்திகை 28ம் தேதி அன்று) 100 நாட்களில் பூர்த்தி செய்யலாம். ஸ்வாமிகள் இந்த விதமான பாராயணத்தை தான் தினம் செய்யும் ஸ்ரீமந் நாராயணீய பாராயணங்களை தவிர விசேஷமாகத் தனியாகச் செய்து வருவது வழக்கம்.
ஸ்வாமிகள் 1956ல் மிகுந்த வயிற்று வலியால் சிரமப்படும்போது டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னபோது ஒரு நாள் இரவு முழுவதும் குருவாயூரப்பனை தியானித்துக் கொண்டு 8வது தசகம் கடைசி ச்லோகத்தை
அஸ்மிந் பராத்மந் / நநு பாத்மகல்பே
த்வமித்தம் உத்தாபித/பத்மயோநி
அநந்த பூமா /மம ரோகராசிம்
நிருந்த்தி / வாதாலயவாஸ விஷ்ணோ//
விடாமல் சொல்லிக்கொண்டு இருந்து விட்டு மறு நாள் டாக்டரிடம் போனபோது அறுவை சிகிச்சை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பிறகு காஞ்சி மஹா பெரியவாளும் இதே ச்லோகத்தை பக்தர்கள் 45 நாட்களுக்கு 108, 64, 32 அல்லது 16 முறை சொல்லி வந்தால் மஹாரோகங்களிலிருந்து குணமடையலாம் என்று அருளியதாக தெரிய வந்தது.
------
திவ்ய தேச த்யான பாராயண முறை
ஒவ்வொரு நாளும், தான் தினம் பூஜிக்கும் குருவாயூரப்பன் விகரஹத்திற்கு பூஜை செய்து ஸ்ரீமத் பாகவதம்/ ஸ்ரீமந் நாராயணீயம் பாராயணம் ஆரம்பிக்கும் முன் மனதினால் குருவாயூர் கோவிலை நன்குநினைத்துக் கொள்வார். அதாவது மனதினால் முதலில் நாராயண ஸரஸில் (திருக்குளத்தில்) கை கால் அலம்பி ஆசமனம் செய்து கொண்டு பகவதி அம்மனை தரிசித்து விட்டு அங்கிருந்தே மம்மியூர் அப்பனை திசை நோக்கி தொழுதுவிட்டு பகவானுக்கு எதிரில் உள்ள கொடி மரத்திற்கு (த்வஜஸ்தம்பம்) பக்கத்தில் நமஸ்காரம் செய்து கொண்டு உள்ளே சென்று இடது பக்கத்து திண்ணையில் நாராயண பட்டத்ரி உட்கார்ந்து ஸ்ரீமந் நாராயணீய ஸ்தோத்திரத்தை சொன்ன இடத்தை தொட்டு ஒத்திக் கொண்டு, குருவாயூரப்பனை தரிசனம் செய்து, உள் பிராகாரத்தில் உள்ள வலம்புரி மஹாகணபதி, தூண்களில் உள்ள பத்து அவதார மூர்த்திகள், குருவாயூரப்பனே ஏற்பாடு செய்து கொண்ட வேணுகோபால சிற்பம் உள்ள தூண், அனந்தசயனப் பெருமாள், முருகன், ஆஞ்ஜநேயர் முதலிய மூர்த்திகளை தரிசித்துவிட்டு வெளிபிரஹாரத்தை சுற்றும் போது ஐயப்பன் சன்னதி, கொடி மரத்தில் உச்சியில் இருக்கும் தங்க கருடனையும் தரிசித்துக் கொண்டு மறுபடியும் கொடி மரத்தின் கீழ் நமஸ்காரம் செய்து விட்டு, பாராயணத்தைத் தொடங்குவார். இந்த மாதிரி செய்வதற்கு ‘திவ்ய தேச த்யானம் ’ என்று ஸ்வாமிகள் சொல்லுவது வழக்கம்.
காஞ்சி மஹா பெரியவாளும் இதை ஆமோதித்து இந்த மாதிரி செய்வது தினம் குருவாயூர் க்ஷேத்திரத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வருவதற்கு சமம் என்றும் அனுக்ரஹித்திருக்கிறார்கள் பக்தர்களும் இதே முறையில் மனதில் நினைத்துப் பாராயணத்தை செய்தால் மஹாபாலனை அடையலாம் என்ற நோக்கில் இது எழுதப்பட்டிருக்கிறது.
ஸ்வாமிகள் ஸ்ரீமந் நாராயணீய ஸ்தோத்திரத்தில் உள்ள சில முக்கியமான வரிகளை பக்தர்கள் அடிக்கடி சுலபமாக சொல்லி வந்து க்ஷேமங்களை அடையலாம் என்று சொல்லுவார். ஸ்லோகங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
1. 53 வது தசகம் கடைசி ச்லோகம் -
‘ஜ்யேதி ஜீவேதி நுதோ விபோ த்வம்
மருத்புராதீச்வர பாஹி ரோகாத்//
நாராயண பட்டத்ரி குருவாயூரப்பனுக்குப் பல்லாண்டுப் பாடுகிறார். இதைத் தினமும் பாராயணம், பூஜை முடிந்தவுடன் 3 தடவைகள் சொல்லுவது வழக்கம்.
2. 57வது தசகம் கடைசி ச்லோகம்
‘காலம் விஹாய ஸத்யோ லோலம்பருசே
ஹரே ஹரே: க்லேசான்//’
3. 58 வது தசகம் கடைசி ச்லோகம்
‘பவனபுரபதே த்வம்
தேஹி மே தேஹ ஸௌக்யம்//’
4. 60 வது தசகம் கடைசி ச்லோகம்
‘கருணாசிசிரோ ஹரே ஹர
த்வரயா மே ஸகலாமயா வலிம் //’
5. 68வது தசகம் கடைசி ச்லோகம்
‘குருபுரீபதே பாஹி மாம் கதாத்//’
6. 78 வது தசகம் (ருக்மணி கல்யாணம்) 7 வது ச்லோகம்
‘அயி க்ருபாலய பாலய மாம்
ஜகதேகபதே //’
7. 85 வது தசகம் - 10வது ச்லோகம்
‘ஜயதி க்ருஷ்ண:’ (இதை சொல்லி வந்தால் காரியஸித்தி ஏற்படும்
8. 88வது தசகம் கடைசி ச்லோகம்
‘ஸத்வம் விச்வார்த்தி சாந்த்யை
பவன புரபதே பக்தி பூர்த்யை ச பூயா://’
(இதை சொல்லி வந்தால் உலகில் அனைவருக்கும் மனசாந்தி ஏற்படும்)
9. 95வது தசகம் கடைசி ச்லோகம்
‘காமயேஹம் த்வாமேவ ஆனந்தபூர்ணம்
பவனபுரபதே பாஹிமாம் ஸர்வதாபாத்//’
10. 98வது தசகம் கடைசி ச்லோகம்
‘சக்ரம் தே காலரூபம் வ்யத யது
நது மாம் த்வத்பதை காவலம்பம்
விஷ்ணோ காருண்ய ஸிந்தோ
பவனபுரபதே பாஹி ஸர்வாமயௌகாத்//’
11. 100 வது தசகம் - 10 வது ச்லோகம்
‘க்ருஷ்ண காருண்ய ஸ்ந்தோ
ஹ்ருத்வா நிச்சேஷ தாபாத்
ப்ரதிசது பரமானந்த ஸந்தோஹஸக்ஷ்மீம்//’
12. 25வது தசகம் - நரஸிம்ம மூர்த்தியை வர்ணிக்கும் 3வது 4வது ச்லோகங்களை சொல்லி வந்தால் எல்லா விதமான பயங்களும் நிவர்த்தியாகும்.
13. மத்ஸ்யாவதாரத்தை வர்ணிக்கும் 32வது தசகத்தைப் பாராயணம் செய்தால் நினைத்த காரியங்கள் இடையூறின்றி நடைபெறும் எண்ணங்கள் நிறைவேறும்
ஸ்வாமிகள் கீழ்க்கண்ட சில முக்கியமான விஷயங்களையும் பக்தர்களுக்கு எடுத்துச் சொல்வது வழக்கம்.
1. ஸ்ரீமந் நாராயணீயத்தில் முதல் 3 தசகங்கள் ரொம்ப முக்கியம். பட்டத்ரி இந்த தசகங்களின் மூலம் அவருடைய கொள்கையைத் தெரியப்படுத்தியது அல்லாமல், பக்தி மார்க்கத்தின் பெருமையையும், பகவானின் கிருபை ஏற்பட்டால் நடக்காத காரியம் ஒன்றுமில்லை என்றும், பகவானிடத்தில் பரிபூரணமான பக்தி இருந்தால் இந்த பக்தியே எல்லா துன்பங்களையும் போக்கி அருளும் என்றும் பகவானுடைய மஹிமையையும் ரூபத்தையும் வர்ணித்தும் அவருடைய தீர்மானத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த கொள்கையிலிருந்து கடைசி வரையில் மாறாமல் இந்த ஸ்தோத்ரத்தை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3 தசகங்களின் அர்த்தத்தை நன்கு புரிந்து கொண்டு ஸ்ரீமந் நாராயணீயத்தைப் படிப்பது ரொம்ப உத்தமம்.
2. 91 முதல் 97 வரை உள்ள 7 தசகங்களில் நவயோகி உபாக்யானமும், உத்தவ உபதேசமும் அடங்கி இருக்கிறது. இங்கு பட்டத்ரி அடிக்கடி பொதுவாக ஜனங்களுக்கு (வித்வான்களுக்கும்) சாதாரணமாக இருக்கக்கூடிய குறைகள் தனக்கு ஏற்படாமல் செய்து பக்தி வைராக்யத்தை கொடுத்து ஞானம் அனுபவத்திற்கு வரும்படி குருவாயூரப்பனை பிரார்த்தித்துக் கொள்கிறார். இந்த 7 தசகங்களை அர்த்தத்தைத் தெரிந்து கொண்டு தினம் 1 தசகம் வீதம் 1 வாரத்தில் முடிக்கும்படி திரும்பத் திரும்ப பாராயணம் செய்து வந்தால் பகவத் கிருபையால் பக்தி, வைராக்யம் விருத்தி அடைந்து ஜன்மலாபத்தை அடையலாம்.
குருவாயூரப்பனிடம் தீவிர பக்தியுடையவரும் வாழ்ந்து காட்டிய மஹானுமான சத்குரு கோவிந்த தாமோதர ஸ்வாமிகளால் மேலே கூறப்பட்டுள்ள விஷயங்களை மனதில் கொண்டு குருவாயூரப்பன் த்யானத்துடன் பக்தர்கள் ஸ்ரீமந் நாராயணீயத்தைப் பாராயணம் செய்து குருவாயூரப்பனின் அருளுக்குப் பாத்திரமாகி எல்லா ச்ரேயஸுடனும், மனஸ்சாந்தியுடனும் ஆயுர் ஆரோக்ய சவுக்கியத்துடனும் விளங்கி ஜன்மலாபத்தையும் அடைய வேண்டுமென்று பிரார்த்திதுக் கொள்ளப்படுகிறது.