சோழர் காலம் வரையில் தீபாவளிப் பண்டிகை தமிழகத்தில் பெருமளவில் கொண்டாடப்படவில்லை. திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் முதன்முதலில் மதுரையில்தான் தீபாவளித் திருவிழா அறிமுகமானதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. கி.பி. 1117-ல் கிடைத்த சாளுக்ய திரிபுவன மன்னரின் கன்னடக் கல்வெட்டில் ஆண்டுதோறும் தீபாவளி நாளன்று சாத்யாயர் என்ற அறிஞர்களுக்கு மன்னன் பரிசு வழங்கி கவுரவித்த குறிப்பு உள்ளது. தீபாவளி பற்றிய முதல் குறிப்பு இதுதான். ஹர்ஷர், தமது நாகானந்தம் என்ற நாடக நூலில் தீபாவளியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். புதுமணத் தம்பதியர்க்கு தீபாவளி நாளில் புத்தாடை வழங்கும் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்ததாகக் கூறியுள்ளார். மராத்திய நூலான லீலாவதியில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக்குளிக்கும் வழக்கத்தைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இது கி.பி. 1250-ல் இயற்றப்பட்டது. சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் ஐப்பசி மாத அமாவாசை நாளில் கோயில்களிலும் வீடுகளிலும் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடுகள் நடத்தியதாகவும், அந்த நாளே தீபாவளி என்றும் கூறப்பட்டுள்ளது.