பதிவு செய்த நாள்
03
நவ
2018
12:11
புதுக்கோட்டை: புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிர்வாகிகள், முதுகுன்ற முடையார் கோவிலில் பயிற்சியளித்த போது, மறைந்து கிடந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது குறித்து ஆய்வுக்கழக நிர்வாகிகள், ராஜேந்திரன், மணிகண்டன் ஆகியோர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க மூவர் கோவில், மகிமாலைய இருக்கு வேள் என்பவரால், முதலாம் பராந்தகன் காலத்தில் கட்டப்பட்டது. மணிக்கிராமம் எனும் வணிகக்குழுவின் தலைநகராக விளங்கிய கொடும்பாளூர், வரலாற்று சிறப்புமிக்கது. இவ்வூரில், சான்றுகள் இன்னும் அறியப்படாமலேயே உள்ளன. தற்போது, இரண்டு கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இவை, 17வது இரட்டைபாடி கொண்ட சோழ வள நாட்டு குலோத்துங்க சோழரின், பதினேழாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. இதில், முற்று பெறாத கல்வெட்டும், கொற்றக்குடைப்பன்மை முந்நுாற்றுவரும் பக்கல், வலப்பாடி நிலத்துள் கரைக்கிழச்செய்யும் வேலை என்று பொறிக்கப்பட்ட, வணிகக்குழுவின் கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டுஉள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.