பதிவு செய்த நாள்
03
நவ
2018
12:11
ஊட்டி:நீலகிரியில் உள்ள கிறிஸ்தவர்கள், கல்லறை திருநாளை முன்னிட்டு, தங்களுடைய குடும்பத்தில் இறந்தவர்களின் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஆண்டுதோறும் நவ., 2ல், கல்லறை திருநாளாக, கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். நடப்பாண்டின் திருநாளில் கத்தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் நடந்த திருப் பலியில், இறந்தவர்களை நினைவு கூரும் வகையிலும், அவர்களின் ஆன்மா அமைதியில் இளைப்பாற வேண்டியும், சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
ஊட்டி காந்தள் குருசடியில் சிறப்பு திருப்பலி நடந்தது.இதேபோல, மாவட்டம் முழுக்க ஆங்காங்கே உள்ள கல்லறை தோட்டங்களில் உள்ள தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் கல்லறைகளை, சுத்தப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏந்தி, அவர்களது உறவினர்கள் பிரார்த்தனை செய்தனர்.
ஊட்டி புனித மேரீஸ் தேவாலயம் அருகே உள்ள கல்லறை தோட்டம், காந்தள் குருசடி திருத்தலம் அருகேயுள்ள கல்லறை தோட்டம், காந்தள் முக்கோணம் கல்லறை தோட்டம், ஊட்டி இருதய ஆண்டவர் தேவாலயம், அருவங்காடு பாபு கிராமம், சி.எஸ்.ஐ., திருமண்டலம் சார்பில், ஊட்டி புனித ஸ்டீபன் தேவாலயம், புனித தாமஸ் தேவாலய பகுதி என, மாவட்டம் முழுக்க உள்ள கல்லறை தோட்டங்களில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.