பதிவு செய்த நாள்
03
நவ
2018
02:11
அறியாமை இருளகற்றி பேரின்ப ஒளியேற்றும் உன்னதத் திருநாள் தீபாவளி. இந்த நன்னாள் முதற்கொண்டு வறுமையும் பசிப்பிணியும் விலகி, நம் இல்லமும் உள்ளமும் மகிழ்வுற.. அன்று அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும். இந்த தேவியின் அருளிருந்தால் நம் வீட்டில் அன்னத்துக்கு பஞ்சம் வராது. அன்னையின் அருளைப் பரிபூரணமாகப் பெற உதவும் அற்புதமான ஒரு ஸ்தோத்திரம் உண்டு.
நித்யானந்தகரீ வராபயகரீ ஸௌந்தர்யரத்னாகரீ
நிர்தூதாகிலகோரபாபநிகரீ ப்ரத்யக்ஷமாகேஸ்வரீ
ப்ராலேயாசலவம்ஸபாவகரீ காஸீபுராதீஸ்வரீ
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ
பொருள் : சாச்வதமான ஆனந்தத்தை உண்டுபண்ணுபவளும் வரத ஹஸ்தத்தையும் அபய ஹஸ்தத்தையும் உடையவளும், அழகுக் கடலாக இருப்பவளும் ஸகலமான பயத்தைத் தரும் பாபக் கூட்டங்களை நாசம் செய்பவளும், சாக்ஷாத் மகேஸ்வரியும், ஹிமாவானுடைய வம்சத்தைப் பரிசுத்தம் செய்பவளும், காசி நகரத்து நாயகியும் பக்தர்களுக்கு கிருபையாகிய ஊன்றுகோலைக் கொடுப்பவளுமான தாயே... அன்னபூரணியே... பிச்சையைக் கொடு.
ஜகத்குரு ஆதிசங்கரர் அருளிய அன்னபூரணா ஸ்தோத்திரத்தின் அற்புதமான பாடல் இது. தீபாவளி நாளில் மட்டுமல்ல, தினமும்கூட இந்த ஸ்தோத்திரத்தைப் பாடி அன்னபூரணியை வழிபடுவது, விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். அனுதினமும் இந்த ஸ்தோத்திரத்தைப் படித்து...
அன்னபூர்ணே ஸதாபூர்ணே ஸங்கரப்ராணவல்லபே
ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம்தேஹி ச பார்வதி...
அதாவது... அன்னம் நிறைந்தவளே, எப்போதும் பூர்ணமாக இருப்பவளே, சங்கரனுடைய பிராண நாயகியே, ஹே பார்வதியே... ஞானம், வைராக்கியம் இவை உண்டாவதற்காக பிச்சைக் கொடு என்று அன்னையைத் தியானித்து வழிபட, சங்கடங்கள் யாவும் நீங்கி சர்வ மங்கலங்களும் நம் வீட்டில் உண்டாகும்.