பதிவு செய்த நாள்
05
நவ
2018
12:11
கூடலூர்:சபரிமலை சீசன் துவங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், எல்லைப் பகுதியான குமுளியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது குமுளி. இங்குள்ள கேரள பஸ் ஸ்டாண்ட் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடியதாக உள்ளது. அதே வேளையில், தமிழகப் பகுதியில் உள்ள குமுளி பஸ் ஸ்டாண்ட் வசதியில்லாமல், ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.
ரோட்டையே சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. சபரிமலை சீசனில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் இவ்வழியே அதிகம் வருகின்றனர். குமுளி வரை சென்று திரும்பும் அரசு பஸ்கள், ரோட்டிலேயே திருப்புவதால் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மலைப்பாதையில் நீண்ட நேரம் நிற்கும் வாகனங்களால் மேலும் அதிகமாக நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் உள்ளது.துவங்காத பணி:இதற்கு தீர்வு காண்பதற்காக, அங்கு இயங்கி வந்த போக்குவரத்து பணிமனையை, பஸ் ஸ்டாண்டாக மாற்றுவது எனவும், லோயர்கேம்பில் புதிதாக பணிமனை அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, லோயர்கேம்பில் பணிமனை கட்டுமானப் பணிகள் முடிந்து, தற்போது பஸ்கள் நிறுத்தி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில், குமுளியில் பணிமனை இயங்கி வந்த இடத்தில் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகள் பல ஆண்டு களாகியும் இதுவரை துவங்கவில்லை.தற்காலிக பஸ் ஸ்டாண்ட்:சபரிமலை சீசன் துவங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், கூடுதலான ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் குமுளி வழியாக அதிகம் வரும். இதனால், தற்போதுள்ள டெப்போவை தற்காலிக பஸ் ஸ்டாண்டாக மாற்றி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குமுளி மலைப் பாதையில் தற்போது சீரமைக்கப்பட்ட பகுதியில் எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டும். மலைப் பாதையில் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.