பதிவு செய்த நாள்
06
நவ
2018
02:11
பழநி, பழநி முருகன் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடர்பாக, நாளை மறுநாள் (நவ.,8ல்) சிலைகள், கற்துாண்களை பொறியாளர்கள், தொல்லியல் துறையினர், ஸ்தபதி குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
பழநி முருகன் கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிேஷகம் நடந்தது. ஆகமவிதிப்படி 12 ஆண்டுகள் முடிந்து விட்டதால், அடுத்தாண்டு கும்பாபிேஷகம் பழநியில் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.மலைக் கோயிலின் பழமை மாறாமல் தேய்மானம், சேதமடைந்துள்ள கற்சிலைகள், துாண்கள், சுதைகள் புதுப்பிக்கப்பட உள்ளன.இப்பணிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நாளை மறுநாள் (நவ.,8ல்) இந்துசமய அறநிலையத்துறை திருப்பணிக்குழு ஸ்தபதிகள், பொறியியல், தொல்லியியல்துறை வல்லுனர் குழு வருகின்றனர்.அக்குழுவினர் மலைக்கோயிலின் அனைத்து பிரகாரங்களிலும் கற்சிலைகள், மண்டபத்துாண், சுதைகளை ஆய்வுசெய்ய உள்ளனர்.இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், வல்லுனர்குழு அறிக்கை வழங்கியபின், திருப்பணிகள் துவங்கப்படும் என்றார்.