பதிவு செய்த நாள்
07
நவ
2018
11:11
திருநெல்வேலி: திருச்செந்தூர், பழநி முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா நாளை துவங்குகிறது. நவ., 13ல் சூரசம்ஹாரம் நடக்கிறது. துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துாரில் நடக்கும் கந்தசஷ்டி விழாவில் தமிழகம் மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்களும் வந்து விரதம் மேற்கொள்கின்றனர். விழாவை முன்னிட்டு நாளை (நவ.,8) அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகம், காலை 5.15 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலை பூஜைக்கு புறப்படுகிறார். காலை 7:30 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளுகிறார். சண்முகவிலாச மண்டபத்தில் மதியம் 1:30 மணிக்கு எழுந்தருளுகிறார்.
மாலை 4:30 மணிக்கு திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி வலம் வந்து கோயிலை அடைகிறார். நாளை முதல் பக்தர்கள் விரதத்தை துவக்குகின்றனர். திருவிழா நாட்களில் தினசரி அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்படும். கோயிலில் உள்ள மண்டபத்தில், தினசரி கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கவுள்ளன.
சூரசம்ஹாரம்:நவ.,13 ல் அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். மாலை 4:30 மணிக்கு கடற்கரையில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு பணிகள், கூடுதல் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
பழநி: பழநியில் நாளை உச்சிக்கால பூஜையில் காப்புகட்டுதல் நடைபெறும். நவ.,13ல் கந்தசஷ்டி அன்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கு மலைக்கோயில் நடைதிறக்கப்படும். மதியம் 1:30மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மதியம் 2:30 மணிக்கு சன்னதி நடை சாத்தப்படும்.
அசுரர்கள் வதம் : மாலை வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடக்கிறது. நவ.,14ல் மலைக்கோயிலில் காலையில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணைஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.