பதிவு செய்த நாள்
07
நவ
2018
12:11
கீழக்கரை: ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற சிவாலயம். இங்குள்ள பச்சை மரகத நடராஜர் சன்னதி பிரகார அகழி மண்டபத்தின் வலது மேற்கில் காண்பதற்கு அரிதான உபதேசக்காட்சி விக்ரகம் அமைந்துள்ளது. 4 அடி உயரத்தில் லிங்கம் வடிவில் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட சிற்பத்தில், சிவபெருமான் இலந்தை மரத்தின் அடியில் அமர்ந்து மாணிக்கவாசகர், சிவனடியார்க்கு அருளுபதேசம் வழங்கும் காட்சி அழகுற செதுக்கப்பட்டுள்ளது.
* ஏகபாத உருத்திரர்: மரகத நடராஜர் சன்னதியின் பின்பக்க சுவற்றில் காட்சி அளிக்கும் அரிதான அவதார சிற்பம் அமைந்துள்ளது. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் செய்யும் பிரம்மா, மகாவிஷ்ணு, சிவன் ஆகியோர் ஒன்றிணைந்த மகா ஐக்கிய காட்சி சிறப்பு பெற்றது. சிவபெருமானின் இடது பக்கத்தில் மகா விஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும் ஒருங்கிணைந்த உடலிலும், நீண்ட ஒரே பாதத்தில் இணைந்திருப்பது அரிய காட்சியாக உள்ளது. உத்தரகோசமங்கை ஸ்தானிக ஓதுவார் எம். விஜயமுருகன் கூறுகையில், இக்கோயிலில் உள்ள இலந்தை மரத்தின் அடியில், முதற் பிறவியில் மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் உபதேசம் பெற்றார். அப்போது 999 பூதகணங்களும் உடன் இருந்தன. இதே போல் ஆவுடையார் கோயிலில் குருந்த மரத்தில் அருள்பாலித்தார். 2வது பிறவியில் திருவாதவூரில் பிறந்து, திருவாசகம், திருக்கோவை ஆகிய நுால்களை இயற்றி உத்தரகோசமங்கைக்கு வந்தருளினார். மாணிக்கவாசகர் பெற்ற உபதேசக்காட்சி பக்தர்களின் வழிபாட்டில் உள்ளது.
மங்களநாத சுவாமி கோயிலில் கல்லில் வடிக்கப்பட்ட சிங்கத்தின் வாயில் குண்டு, இரும்புச்சங்கிலி போன்ற கல் சங்கிலி, சப்த ஸ்வரங்கள் கொண்ட துாண் பாறை போன்ற கலைநுணுக்கமான சிற்பங்கள் போன்ற காணக் கிடைக்காத சிலைகள், சிற்பங்கள் கோயிலில் அமைந்துள்ளது. சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் மனதை இறைநிலையுடன் கலைநயம் ஒருங்கிணைக்கிறது, என்றார்.