உளுந்துார்பேட்டை: திருநாவலுாரில் நம்பியாரூரன் கோவில் ஆகம விதிகளை மீறி நேற்று குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுாரில் நம்பியாரூரன் என்ற சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் புனரமைத்து நேற்று குடமுழுக்க நன்னீராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகம விதிகளை மீறி, அமாவாசையில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடத்த சிவாச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் நம்பியூரான் கோவில் குடமுழுக்கு திட்டமிட்டபடி நேற்று நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு முதற்கால வேள்வி வழிபாடு நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி வழிபாடும், 6:15 மணிக்கு சுந்தரர் வாழ்க்கை வரலாறு புடைப்பு சிற்பம் நிறுவுதலும், 6:30 மணிக்கு திருத்தேர் திருப்பணி துவக்கம் நடைபெற்றது. தொடர்ந்து காலை, 9:30 மணிக்கு திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடந்தது.