பதிவு செய்த நாள்
11
பிப்
2012
01:02
சிவராத்திரியன்று புராணத்தோடு தொடர்புடைய தலங்களில் இறைவனை தரிசிப்பதால் கோடான கோடி புண்ணியம் கிடைக்கும். திருவண்ணாமலை : ஒரு மகா சிவராத்திரி நாளில் லிங்கோற்பவ காலத்தில் இறைவன் இத்தலத்தில் ஜோதி உருவாகக் காட்சி கொடுத்தார் என்கிறது சிவபுராணம். திருவண்ணாமலை தலத்தில் சிவராத்திரி தரிசனம் செய்வது வாழ்வில் தடைகளைப் போக்கி வெளிச்சமாக்கும்.
திருக்கழுக்குன்றம் : செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருத்தலம். கோடி ருத்திரர்கள் சிவராத்திரி காலத்தில் பூஜை செய்த இடம் இது. எனவே இத்தலத்தை உருத்திரகோடி என்பார்கள். சிவராத்திரியன்று இத்தலத்தில் வழிபடுவது செழிப்பான வாழ்வளிக்கும்.
காஞ்சிபுரம் : தன் பதியான பசுபதியின் கண்களை பார்வதி விளையாட்டாகப் பொத்த உலகங்களும் இருண்டன. அதனால் சிவன் தன் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதன் வெப்பம் தாளாமல் உலக உயிர்கள் வருந்தின. அந்த சங்கடம் நீங்கிட ருத்திரர்கள் இங்கு பூஜை செய்தனர். காஞ்சியில் உள்ள கோயில்களான ஆனந்தருத்ரேசம், மகாருத்ரேசம், ருத்திரகோடீசம் ஆகியவை ருத்திரர்கள் பூஜித்த தலங்கள். காஞ்சியில் ஒருபகுதி உருத்திர சோலை எனப்பட்டது. உலகத்தாருக்குத் துன்பம் ஏற்பட்ட பாவத்திலிருந்து விடுபட பார்வதி, காமாட்சியாக இருந்து சிவனை பூஜை செய்த இடமும் காஞ்சிபுரமே. எனவே காஞ்சியில் சிவராத்திரி தரிசனம் செய்வது, அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களைப் போக்கும்.
திருவைகாவூர் : தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள தலம். இத்தல இறைவன் வில்வவனேஸ்வரரையும் அம்பிகை சர்வஜனரட்சகியையும் ஒரு சிவராத்திரி நாளில் தவநிதி என்ற முனிவர் கோயிலில் வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வேடனால் துரத்தப்பட்ட ஒரு மான் கோயிலுக்குள் நுழைய, முனிவர் அபயமளித்தார். வேடன் முனிவரை தாக்க முற்பட, சிவபெருமான் புலி வடிவமெடுத்து வேடனைத் துரத்தவே வேடன் பயந்து அருகில் இருந்த வில்வ மரத்தில் ஏறிக் கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நிற்க வேடன் தூங்கி விடுவோமோ என்ற பயத்தில் வில்வ இலையை பறித்துக் கீழே போட்டான். அவை கீழே புலியாக நின்ற சிவபெருமான் மேல் விழ, அதனையே பூசனையாக ஏற்று வேடனுக்குக் காட்சியளித்து மோட்சம் அளித்தார் இறைவன். இத்தல வழிபாடு மோட்ச சித்தியளிக்கும். பிறவிப்பிணி தீர்க்கும்.
திருக்கடவூர் : தன் பக்தன் மார்க்கண்டேயனை பிடிக்க வந்த காலனை சிவன் காலால் உதைத்த சம்பவம் நடந்தது சிவராத்திரி நாள் ஒன்றில் என்பர். காலசம்ஹாரரை சிவராத்திரி நாளில் வணங்குவது, அகால மரணபயம் போக்கும்.
ஓமாம்புலியூர் : சிவராத்திரி நாள் ஒன்றில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளைச் சொன்ன இடம் ஓமாம்புலியூர் இந்த ஊரை பிரணவ வியாக்ரபுரம் என்கிறார்கள். சிதம்பரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் இது. இங்கே சிவராத்திரி வழிபாடு செய்வது மனநிம்மதிக்கு வழிவகுக்கும் என்பது ஐதிகம்.
தேவிகாபுரம் : ஒரு காலத்தில் இப்பகுதி பெரிய காடாக இருந்தது. ஒரு சமயம் சிவராத்திரி நாளில், வேடன் ஒருவன் இப்பகுதியில் நிலத்தைத் தோண்டியபோது, ஒரு லிங்கம் வெளிப்பட்டது. கடப்பாரை பட்டதால் லிங்கத்திலிருந்து ரத்தம் வழிந்தது. அதிர்ச்சியடைந்த வேடன், காயம்பட்ட இடத்தில் மூலிகை வைத்துக் கட்டினான். பிறகு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்தால் காய்ச்சல் வந்து விடுமோ என்று வெந்நீரால் அபிஷேகம் செய்தான். அதை தொடர்ந்து இன்றும் இத்தலத்தில் இவருக்கு வெந்நீர் அபிஷேகமே செய்யப்படுகிறது. இந்த வழியே போருக்குச் சென்ற மன்னன் போரில் வெற்றி அடைந்தால் அந்த லிங்கத்திற்கு மலையின் மீது கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டான். போரில் வெற்றி பெற்றதும் ஆலயம் அமைத்தான். பிரதிஷ்டை செய்ய வேண்டிய நேரத்தில் சுயம்பு லிங்கம் காணாமல் போனதால், காசியிலிருந்து லிங்கம் கொண்டு வரச் செய்தான். அப்போது, காணாமல் போன லிங்கம் கிடைத்துவிடவே, அதற்குக் கனககிரீஸ்வரர் என்று பெயர் சூட்டி, ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்தான். இக்கோயில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூர், வந்தவாசி சாலையில் மலைக்குன்றின் மேல் உள்ளது. இங்கே சிவராத்திரி பூஜை செய்வது வாழ்வில் வெற்றிக்கு வழிசெய்யும்.
கோகர்ணம் : ராவணனுக்கு ஈசனாலேயே வழங்கப்பட்ட பிராணலிங்கம் உள்ள தலம். பிள்ளையார், ராவணனுடன் நடத்திய திருவிளையாடலால் இறைவன் இங்கேயே அமைந்தார். சுவாமி மகாபலேஸ்வரர். அம்பிகை தாம்ரகவுரி. மாசி மாத சிவராத்திரி நாள் ஒன்றில் பிரம்மா இத்தல இறைவனை வழிபட்டதையொட்டி இங்கு பிரம்மோத்சவமும் சிவராத்திரி அன்று இரவு தேரோட்டமும் நடக்கும். கர்நாடக மாநிலம் ஹுப்ளிக்கு அருகில் உள்ள இங்கு சிவராத்திரி வழிபாடு செய்வது முன்வினை போக்கும்.
ஸ்ரீசைலம் : சிலாதமுனிவரின் மகனான நந்தி சிவவழிபாடு செய்து சிவனைத் தாங்கும் வரம் பெற்ற தலம். நந்தி தேவரே இங்கு மலை உருவில் இருக்கிறார். இத்தலத்தை திருப்பருப்பதம் என்றும் மல்லிகார்ஜுனம் என்றும் அழைப்பர். ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றான இங்குதான் ஆதிசங்கரமகான் சிவானந்தலஹரி ஸ்லோகத்தினை இயற்றினார். அச்சம்பவம் சிவராத்திரி நாள் ஒன்றில் நிகழ்ந்ததாகக் கூறுகின்றனர். இத்தலத்தில் சிவராத்திரியன்று சிவனை வழிபடுவது ஏராளமான புண்ணியப் பலன்களை தரக்கூடியது.
காளஹஸ்தி : இக்கோயிலில் ஒவ்வொரு பட்சத்தில் வரும் சதுர்த்தசி நாளும் நித்திய சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. கண்ணப்ப நாயனார் சிவராத்திரி நாள் ஒன்றில்தான் தன் கண்களை சிவபெருமானுக்குக் கொடுத்தார். சிவராத்திரி நாட்களில் இங்கு தேரோட்டம், ரிஷப வாகன சேவை நடக்கிறது. சிவராத்திரி தரிசனத்தை இத்தலத்தில் மேற்கொள்வது இறையருளால் வாழ்வில் இன்றியமையாத யாவும் கிடைக்கச் செய்யும்.
நாகதோஷம் போக்கும் சிவன்
வணிகன் மகள் ஒருத்தி திருமணத்திற்காக திருமருகல் (திருவாரூர் அருகில்) என்னும் தலத்திற்கு வந்து தங்கியிருந்தாள். திருமணத்திற்கு முதல்நாள் இரவு மணமகனை நாகம் தீண்டியதால் இறந்தான். அந்த சமயத்தில் திருமருகல் சிவனை வழிபட வந்த ஞானசம்பந்தர், மணப்பெண்ணின் அழுகுரல் கேட்டார். இரக்கப்பட்ட அவர், திருமருகல் ஈசனான மாணிக்கவண்ணர் மீது பதிகம் பாடினார். சிவனருளால் மணமகன் தூங்கி எழுவது போல கண்விழித்தான். குறித்த முகூர்த்தத்தில் திருமணம் நடந்தேறியது. நாகதோஷத்தால் உண்டாகும் திருமணத்தடையைப் போக்குவதில் சிறந்த தலம். திருவாரூர், கும்பகோணத்தில் இருந்து பஸ் உண்டு.
எல்லாம் இங்கு ஐந்து தான்!
சிவபெருமானுக்கு ஐந்தெழுத்து மந்திரத்தால் ஏற்பட்ட பெயர் பஞ்சாட்சரம். பஞ்சாட்சர மந்திரமான நமசிவாயத்தை இறைவனே ஓதுவதால் காசியை விட புனிதமான தலமாக விருத்தாசலம் போற்றப்படுகிறது. விருத்தாசலம் என்பதற்கு பழமையான மலை என்பது பொருள். பூலோகத்தில் இம்மலையே மிகப்பழமையானது என்று இக்கோயில் புராணம் கூறுகிறது. இக்கோயிலுக்கும் ஐந்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. திசைக்கொரு கோபுரமாக நான்கு ராஜகோபுரங்களும், கோயிலுக்குள்ளே ஒரு கோபுரமாக ஐந்து கோபுரங்கள் உள்ளன. கோயிலில் ஐந்து கொடிமரங்கள் உள்ளன. ரம்மோற்ஸவத்தின்போது ஐந்து கொடிமரத்திலும் கொடி ஏற்றப்படுகிறது. வலப்புறம் தலைசாய்த்தபடியே ஐந்து நந்திகள் இருப்பது சிறப்பாகும். மணிமுத்தாறு, அக்னி, சக்கர, குபேர, நித்தியானந்த கூபம் என்னும் ஐந்து தீர்த்தம் இங்குண்டு. விபசித்து, உரோமசர், குமாரதேவர், நாதசர்மா, அவைர்த்தணி என்னும் ஐந்து ரிஷிகள் விருத்தகிரீஸ்வரரை வழிபட்டு முக்தி பெற்றனர்.
பிரபஞ்சமே சிவம்
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் கடவுளுக்கு சம்பந்தமான ஐந்து என்பது பொருள். பிரபஞ்சம் என்பது பஞ்சபூதங்களின் சேர்க்கை. பரப்பிரம்மமே ஐம்பெரும் பஞ்சபூதங்கள் என்று பிரஸ்ன உபநிஷதம் கூறுகிறது. இயற்கையே இறைவன் என்னும் கோட்பாடின் அடிப்படையில் இந்த ஐந்திற்கும் தனித்தனியாக சிவலிங்கம் வடித்து பஞ்சபூதத்தலங்களை ஏற்படுத்தினர். அவையே காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (மண்), திருவானைக்காவல்( நீர்), திருவண்ணாமலை(அக்னி), காளஹஸ்தி (வாயு), சிதம்பரம் (ஆகாயம்) ஆகிய தலங்களாகும். இதேபோல, சிவபெருமானுக்கு பொன்னம்பலம், வெள்ளியம்பலம், தாமிரசபை, ரத்தினசபை, சித்திரசபை ஆகிய ஐந்து சபைகளாக சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, திருவாலங்காடு, குற்றாலம் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.
பொன்னான பாட்டு பிறந்த தலம்
மார்க்கண்டேயருக்காக சிவன் மழு என்ற ஆயுதம் (கோடரி வடிவம்) நடனமாடிய தலம் மழுவாடி. தற்போது மழபாடி என்று மாறிவிட்டது. நந்திதேவர், சுயசாம்பிகையை இங்கு திருமணம் செய்து கொண்டார். தேவாரம் பாடிய சுந்தரரின் கனவில் தோன்றிய சிவன், மழுவாடிக்கு வர மறந்தனையோ?, என்று நினைவூட்டினார். உடனே, இங்கு வந்து, பொன்னார் மேனியனே என்று தொடங்கும் புகழ்பெற்ற பதிகத்தைப் பாடினார். என் தாயானவனே! திருமழபாடியில் அருள்புரியும் மாணிக்கமே! உன்னை விட்டால் வேறு யாரை நான் நினைப்பேன்என்ற பொருளில் மழபாடியில் மாணிக்கமே! அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே! என்று சுந்தரர் உள்ளம் உருகிப் பாடினார்.
மகாராஷ்டிரா மகாபலீஸ்வர்
ஓங்கி உயர்ந்த சிகரங்கள், பள்ளத்தாக்குகள், பசுமை ததும்பி வழியும் காடுகள், வளைந்து நெளிந்து கிடக்கும் மலைத்தொடர்கள், ஜில்லென்று வருடிச் செல்லும் பனிக்காற்று இது தான் மகாபலீஸ்வர். மகாராஷ்டிராவிற்கு பெருமை சேர்க்கும் மலைவாழிடம். ஆங்கிலேயர் ஆட்சியின் போது பம்பாய் மாகாணத்தின் கோடைக்கால தலைநகராக விளங்கிய நகரம். பூனாவிலிருந்து 120 கி.மீ. இந்த ஊரின் பெயரிலேயே கோயில் கொண்டிருக்கிறார் மகாபலீஸ்வர். மகாபலீஸ்வர் என்றால் சக்தி வாய்ந்த ஈஸ்வரன். பஞ்ச கங்கைகளான கோயனா, வெண்ணா, சாவித்ரி, காயத்ரி, கிருஷ்ணா நதிகள் சங்கமிக்கும் நதி தீரத்தில் கோயில் கொண்டிருக்கிறார். மகாராஷ்டிர மக்கள் மகா சக்தியாக போற்றும் கடவுள். பஞ்ச கங்கைகளில் புனித நீராடிவிட்டு சுயம்புலிங்கமாய் காட்சி தரும் ஈஸ்வரனை தரிசித்தால் மகாபலம் பெறலாம்.
மகாபலீஸ்வர் பழமையும், நவீனமும் கலந்து சுற்றுலா பயணிகளுக்கு விருந்து படைக்கும் நகரம். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கோட்டைகளும், கட்டடங்களும் இங்கு உள்ளன. கவர்னர் மால்கம் வசித்த மால்கம் மவுண்ட், காந்தியடிகள் சில காலம் வாழ்ந்த மொரார்ஜி கோட்டை ஆகியன அக்கட்டடங்களில் அடங்கும். மகாபலீஸ்வரிலிருந்து சிறிது தூரத்தில் வெண்ணா ஏரி இருக்கிறது. இங்கு படகு சவாரி விசேஷம். தங்குவதற்கும், சுவைப்பதற்கும், விளையாடுவதற்கும் வசதிகளை மகாராஷ்டிரா சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செய்திருக்கிறது. ஏரியிலிருந்து கீழிறங்கி வந்தால் ஸ்ட்ராபெர்ரி வனம் ரம்மியமாக உள்ளது. மகாபலீஸ்வர் சென்று சிவனை தரிசித்து வாருங்கள்.
மாதர்கள் போற்றிய மாயவரம்
பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் சப்தமாதர்கள், மயிலாடுதுறை (மாயவரம்) மற்றும் சுற்றுப்புற சிவன் கோயில்களில் வழிபட்டுள்ளனர். இவர்கள் வழிபட்ட கோயில்கள் விபரம்.
பிராஹ்மி - தான்தோன்றீஸ்வரம் சுயம்புநாதர் கோயில்
மகேஸ்வரி - கருணாம்பேட்டை சிவன்கோயில்
கவுமாரி - ஆனந்த தாண்டவபுரம் சிவன்கோயில்
வைஷ்ணவி - பசுபதீஸ்வரம் கோயில்
வாராஹி - சக்திபுரி(கழுக்காணி முட்டம்)
இந்திராணி - தருமபுரம் சிவன்கோயில்
சாமுண்டி - உத்தர மாயூரம் சிவாலயம்
சிவபூஜை செய்த சிவன்
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என்று அனைவரும் சிவபூஜை செய்து அருள்பெற்றுள்ளனர். ஆனால், சிவன் தன்னைத் தானே பூஜை செய்து வழிபட்ட தலமே, மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். மூலவர் லிங்கவடிவத்தில் இருக்கிறார். அவருக்கு பின்புறம் சிவபார்வதி சிலைகள் வடிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானே, மதுரையில் சுந்தரபாண்டியராக அரசாட்சி செய்கிறார். பாண்டிய அரசர்கள் ஆட்சி பீடத்தில் அமரும்போது லிங்கபூஜை செய்வது மரபு. இதன் அடிப்படையில், மதுரையில் ஆட்சியில் அமர்ந்த சிவனும், தனது பட்டாபிஷேகத்தின் போது, தனக்குத்தானே பூஜை செய்து கொண்டாராம். அந்த அடிப்படையில், இவ்வாறு சந்நிதி எழுப்பப்பட்டுள்ளது. இதே போன்ற சந்நிதி வேதாரண்யத்திலும் உள்ளது.
ஜடாமுடி சிவலிங்கம்!
சிவனுக்கே உரித்தான ஜடாமுடியுடன் கூடிய லிங்கத்தை, திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகிலுள்ள சிவசைலம் சிவசைலநாதர் கோயிலில் மட்டும்தான் காண முடியும். லிங்கத்தின் பின்னால் உள்ள ஜடாமுடியை பின்புறச் சுவரிலுள்ள துவாரம் வழியாகத் தரிசிக்கலாம்.
காசியில் சப்தரிஷி பூஜை
காசி என்றதும் நம் நினைவில் எழுவது கங்கை நதியும், காசி விஸ்வநாதர் கோயிலும் தான். விஸ்வ நாதருக்கு தினமும் இரவு 7.45- 8.30 வரை சப்தரிஷி பூஜை நடக்கும். அத்ரி, வசிஷ்டர், கஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய ஏழு பேரும் சப்தரிஷிகளாவர். வானமண்டலத்தில் சனி உலகத்திற்கு வடக்கே சப்தரிஷி மண்டலம் உள்ளது. அங்கிருந்து வந்து தினமும் காசி விஸ்வநாதரை இவர்கள் பூஜிப்பதாக ஐதீகம். இதனை குறிக்கும் விதத்தில், கருவறையில் ஏழு அந்தணர்கள்(7பண்டாக்கள்) சூழ்ந்து நின்று பூஜை நடத்துவர்.