பதிவு செய்த நாள்
09
நவ
2018
03:11
நாமக்கல்: ராசிபுரம், மாரியம்மன் கோவில் ஐப்பசி திருத்தேர் விழா கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராசிபுரத்தில், பிரசித்திபெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன், செல்லாண்டியம்மன், ஆஞ்சநேயர் கோவிலில் ஐப்பசி திருத்தேர் விழா அக்., 23ல், பூச்சாட்டுதலுடன் துவங்கி தொடர்ந்து மண்டப கட்டளை நிகழ்ச்சிகள் நடந்தன. 25ல், மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழாவும், நவ., 6ல், பூவோடு எடுத்தலும், அன்று இரவு கொடியேற்று விழாவும் நடந்தது. நவ., 7ல், அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு அக்கினி குண்டம் பிரவேசித்தல் நிகழ்ச்சி நடந்தது. அதை முன்னிட்டு, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் அக்கினிகுண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் திருத்தேர் உற்சவம் நடந்தது. இன்று வண்டி வேடிக்கை, நாளை இரவு மின்விளக்கு ஜோடனையுடன் புஷ்ப பல்லாக்கில் மாரியம்மன் பவனியும், சப்தாபரணமும் நடக்கிறது. 11ல், வசந்தோற்சவம் நடக்கிறது. 12 முதல், 22 வரை விடையாற்றி கட்டளை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜகோபால், தக்கார் செல்வி மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.