பதிவு செய்த நாள்
09
நவ
2018
03:11
வீரபாண்டி: செங்குந்தர் மாரியம்மன், முத்துக்குமாரசுவாமி கோவில் ஆண்டு திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். சேலம், காளிப்பட்டி செங்குந்தர் மாரியம்மன் கோவில் மற்றும் முத்துக்குமார சுவாமி கோவில்களின் நடப்பாண்டு திருவிழா, கடந்த நான்கு நாட்களாக நடந்து வருகின்றன.
நேற்று முன்தினம் (நவம்., 7ல்), குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று (நவம்., 8ல்) காலை நடந்த பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியில், ஆட்டையாம்பட்டி, மருளையம்பாளையம், கண்டர்குலமாணிக்கம், காளிப்பட்டி, மல்லசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் இருந்து, திரளான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
இன்று (நவம்., 9ல்), முத்துக்குமாரசுவாமிக்கு பொங்கல் வைத்து படையலிட்டு, சிறப்பு பூஜை நடக்கவுள்ளது. மாலையில், சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நாளை சப்தாவரணம் மற்றும் வசந்த விழாவுடன், ஆண்டு திருவிழா நிறைவு பெறும்.