பதிவு செய்த நாள்
10
நவ
2018
12:11
ராமநாதபுரம்:திருப்புல்லாணி சக்கர தீர்த்த குளம் மக்கள் முயற்சியால் நிரம்பி வருகிறது. ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் நிலத்தடி நீர் மேம்பாட்டிற்காக பிள்ளையார் குட்டம் ஊரணி, மதகு குட்டம் ஊரணி, கூத்தியார் குட்டம் ஊரணி, சக்கர தீர்த்த குளம் அமைக்கப் பட்டுள்ளன. இவை அனைத்தும் மழை நீரால் நிரம்ம் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
காலப்போக்கில் ஆக்கிரமிப்பாலும், வரத்து கால்வாய்கள் தூர்ந்து போனதாலும் மதகு குட்டம் ஊரணி, சக்கர தீர்த்த குளத்திற்கும் நீர் வரத்து சுத்தமாக நின்று போனது. கடந்த மூன்றாண்டு களாக ஏற்பட்ட வறட்சியால் முற்றிலும் ஊரணிகள் வறண்டதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு மக்கள் திண்டாடினர்.
தற்போது மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு, இளைஞர்கள் ஆர்வத்துடன் ஊரணியில் நீர் தேக்க முயற்சி செய்தனர். மழை உபரி நீரை பெரிய கிணற்றில் சேமித்து, அங்கிருந்து மூன்று
ராட்சத மோட்டாரில் ஊரணிக்கு பம்பிங் செய்கின்றனர்.
இங்கிருந்து மதகு குட்டம் ஊரணிக்கு செல்லும் வகையில் ஊராட்சி நிர்வாகம் கால்வாய் அமைத்துள்ளது.தற்போது மதகு குட்டம் ஊரணி நிரம்பி அதிலிருந்து உபரி நீர் சக்கர தீர்த்த குளத்திற்கு சென்று வேகமாக நிரம்பி வருகிறது.
கே.ராமச்சந்திரன்,52, திருப்புல்லாணி: மூன்று ஆண்டுகளாக வறண்ட நிலத்தடி நீரை பாதுகாக்க மக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் உபரி மழை நீரை சேமிக்க திட்டமிட்டனர். ஊராட்சி நிர்வாகம் உதவியது.
இந்த முயற்சியால் தற்போது மதகு குட்டம் ஊரணி நிரம்பி, சக்கர தீர்த்த குளம் நிறைந்து வருகிறது. எஸ்,தேவேந்திரன்,55, திருப்புல்லாணி: மதகு குட்டம் ஊரணி, சக்கர தீர்த்த குளத் திற்கு வரத்து கால்வாய் இல்லாத நிலையில் தற்காலிக ஏற்பாடாக மோட்டாரில் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. நிரந்தர கால்வாய் அமைக்க மாவட்ட நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.