திருநெல்வேலி : மருகுளத்தில் வேப்பமரத்திலிருந்து திடீரென பால் வடிந்ததை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்து சென்றனர்.மருதகுளத்தில் சிஎம்எஸ்., இவாஞ்சலிக்கல் சர்ச் உள்ளது. இந்த சர்ச்சின் முன் பகுதியில் 26 ஆண்டுகள் பழமை வாய்ந்த 3 வேப்பமரங்கள் உள்ளன. இதில் ஒரே ஒரு மரத்திலிருந்து நேற்று முன்தினம் மதியம் திடீரென பால் வடிய துவங்கியது. நீண்ட நேரத்திற்கு பிறகு வெண்மை நிறத்தில் நுரையோடு 10 அடி உயரத்திலிருந்து அதிகளவில் வடிந்து தரையில் கொட்டியது. இந்த பாலை அப்பகுதி மக்கள் சிலர் ருசித்த போது லேசான இனிப்புடன் உள்ளதாக தெரிவித்தனர். வேப்பரமத்தில் பால் வடியும் தகவல் அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கும் பரவியதால் கடந்த 2 நாட்களாக ஏராளமானோர் வேப்பமரத்தில் பால் வடிவதை பார்த்து அதிசயத்துடன் பார்த்து சென்றனர். அப்போது சிலர் வேப்பமரத்தில் வடிந்த பாலை நோய் தீர்க்கும் மருந்தாக கருதி உடலில் தேய்த்ததோடு, பாத்திரங்களில் பாலை சேகரித்து சென்றனர்.