கடையம் முப்புடாதியம்மன் கோயில் முன் மண்டபம் அமைக்க ஆயத்த பணிகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2012 10:02
ஆழ்வார்குறிச்சி : கடையம் முப்புடாதியம்மன் கோயிலில் முன் மண்டபம் அமைப்பதற்கான சிறப்பு அளவீட்டு பணிகள் நடந்தது. கடையம் வடக்கு ரதவீதியில் முப்புடாதியம்மன் கோயில் உள்ளது. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி ஆகிய 3 முகங்களுடன் சிவாம்சமாக விளங்கி அருள்புரியும் முப்புடாதியம்மன் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலை கூரை வேய்ந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இக்கோயிலில் காவல்துறையினரும் திருவிழா நடத்தும் வழக்கம் உள்ளது. இக்கோயிலில் சுமார் 62அடி உயரம் உள்ள மிகப்பெரிய ஓட்டு கொட்டகை உள்ளது. இந்த கொட்டகை கடந்த 1832ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் கோயில் மண்டகபடிதாரர்கள், வரிதாரர்கள் ஆகியோர் இணைந்து முப்புடாதியம்மன் பக்தர் பேரவையை துவக்கி தற்போதுள்ள ஓட்டு கொட்டகையை கான்கிரீட் மண்டபமாக மாற்றி அமைக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி நிர்வாகிகள் நியமித்துள்ளனர். இதற்கான பூமிபூஜை வரும் மார்ச் 5ம் தேதி காலை 10.45 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் நடக்கிறது. இதற்கு முன்னோடியாக நேற்று காலை முப்புடாதியம்மன் பக்தர் பேரவை பொருளாளர் முருகன், இணை செயலாளர் ராமன் மற்றும் நிர்வாகிகள் பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு அளவீடு செய்யும் பணிகள் நடந்தது. இன்ஜினியர் அருள்நாராயணன் மற்றும் உதவியாளர்கள் அளவீடு பணிகளை செய்தனர். மகா மண்டபம் அமைக்கும் வேலைகளுக்காக பக்தர் பேரவையினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.