பதிவு செய்த நாள்
12
நவ
2018
01:11
ஊத்துக்கோட்டை: நாக சதுர்த்தி விழாவையொட்டி, புற்றுக்கோவில்களில், நேற்று (நவம்., 11ல்) நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.
ஊத்துக்கோட்டை, பேருந்து நிலையம் அருகே உள்ளது நாகவல்லியம்மன் கோவில். இக்கோவிலில், நேற்று (நவம்., 11ல்) காலை நடந்த நாக சதுர்த்தி விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பெண்கள், பால், முட்டை ஆகியவற்றை புற்றில் ஊற்றியும், புது புடவைகளை புற்றின் மேல் சாற்றி, தீபாராதனை செய்தனர்.
முன்னதாக, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து, மலர் மாலைகள் சாற்றி, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.இதேபோல், ஊத்துக் கோட்டை, பூந்தோப்பு பகுதியில் உள்ள புற்றுக்கோவில், நாகலாபுரம் சாலையில், அரசு பேருந்து பணிமனை அருகில் உள்ள புற்றுக்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள புற்றுக் கோவில்களில், நாக சதுர்த்தி விழா, விமரிசையாக கொண்டாடப்பட்டது.