ஒருமுறை நபிகள் நாயகம் நண்பர்கள் சூழ அமர்ந்திருந்தார். அவரைத் தேடி வந்த ஒருவர், “நாயகமே! நான் பெரிய பாவி. குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன். விபசாரம் செய்யும் பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறேன். இந்தப் பாவங்களைச் செய்ய பணம் தேவைப்படுவதால் திருடவும் செய்கிறேன். என்னை பிடித்து விசாரிக்கும் போது ’இதில் எனக்கு சம்பந்தமில்லை’ என பொய் சொல்லி தப்பித்து விடுகிறேன். கொடுமைக்காரனான எனக்கு, ’இவற்றில் ஏதாவது ஒன்றையாவது விட்டு விடுவோமே! எனத் தோன்றுகிறது. எதை விடலாம்?’ எனக் கேட்டார். “பொய்யை விட்டு விடுங்கள்!” என்றார் நாயகம். வந்தவருக்கு மகிழ்ச்சி.
’குடியை விடு என்றால் கை, கால்கள் உதறல் எடுக்கும். பெண் துணை இல்லை என்றால் மகிழ்ச்சி இருக்காது. திருடாவிட்டால் பணம் கிடைக்காது. பிறகெப்படி இந்த சுகங்கள் கிடைக்கும்! பொய்யை விடுவது தானே எளியது! அதற்கு செலவே கிடையாது. விட்டு விடலாம்’ என்று எண்ணியபடியே மகிழ்ச்சியாகச் சென்றார். அன்றிரவு குடிக்கும் எண்ணம் வந்தது. அத்துடன் கன்னி ஒருத்தியின் நினைவும் வந்தது. ஆசையை நிறைவேற்ற திருடப் புறப்பட்டார். திடீரென ஞானோதயம் பிறந்தது. “நாயகம் நாளை என்னை அழைத்து ’நேற்றிரவு குடித்தாயா?, பெண்ணாசையைத் தீர்த்தாயா? திருடினாயா?’ என பலர் முன்னிலையில் கேட்கும் போது இல்லை என மறுக்க முடியாது. ஏனெனில் பொய் சொல்ல மாட்டேன் என உறுதி அளித்திருக்கிறேன். கொடுத்த வாக்கை என்னால் எப்படி மீற முடியும்? சரி... தவறுகளில் ஈடுபட்டால் தானே பொய் சொல்ல நேரிடும்! இல்லாவிட்டால் தைரியமாக உண்மை பேசலாம் அல்லவா! என எண்ணியவராக வீட்டில் படுத்து விட்டார். பார்த்தீர்களா! பொய் தான் சகல பாவங்களுக்கும் ஆணிவேர் என்று!