பதிவு செய்த நாள்
14
நவ
2018
02:11
கோவை: கோவை புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், சூரசம்ஹார விழா நேற்று (நவம்., 13ல்) கோலாகலமாக நடந்தது.
* மேட்டுப்பாளையம் - அன்னூர் ரோட்டில், குமரன் குன்றில் உள்ள கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, 8ம் தேதி துவங்கியது. தினமும், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று (நவம்., 13ல்) காலை, 9:30க்கு நாம ஜெபம், கலச பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தன. மாலை, 4:30க்கு சுவாமி கிரிவலம் வந்து சூரன்களை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடந்தது.
அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் வேலுசாமி, ஆவின் இயக்குனர் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர். இன்று (நவம்., 14ல்) காலை, 9:00க்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சந்திரமோகன் செய்து வருகிறார்.
* தடாகம், அனுவாவி சுப்பிரமணியர் கோவிலில் நேற்று (நவம்., 13ல்) சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன. தொடர்ந்து நடந்த சூரசம்ஹார விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
* கருமத்தம்பட்டி, சென்னியாண்டவர் கோவிலில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா நடந்தது.
சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழச்சி நேற்று (நவம்., 13ல்) மாலை நடந்தது. மாலை, 5:00க்கு வேல் வாங்கும் உற்சவம், இரவு, 7:05க்கு, சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, 10:00க்கு திருக்கல்யாணம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறும்.
* சுல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரி மலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் நேற்று (நவம்., 13ல்) காலை, 8:30க்கு கால சந்தி அபிஷேகம் நடந்தது. மதியம், அபிஷேக பூஜை முடிந்து, பெரிய நாயகி அம்மன் சன்னதியில் வேல் வாங்குதல், சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுதல் வைபவம் நடந்தது. மாலை, 4:00க்கு மலையை சுற்றி வலம் வந்து, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.
தொடர்ந்து மலைக்கு எழுந்தருளிய சுவாமிக்கு, 108 லிட்டர் பால், பன்னீர் மற்றும் இளநீர் அபிஷேகம் நடந்தது. புஷ்ப அலங்கார சேவை, திருப்புகழ் இசை வழிபாடு நடந்தது.
இன்று (நவம்., 14ல்) மதியம் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வழிபட்டனர்.இதேபோல், சூலூர் வைத்தியநாத சுவாமி கோவில், குமரன்கோட்டம் சுவாமிநாத சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது.
* காரமடை அடுத்த குருந்தமலை வேலாயுத சுவாமி கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று (நவம்., 13ல்) மாலை நடைபெற்றது. யானை முகம், சிங்க முகம், அரக்க முகம் உள்ளிட்ட நான்கு முகங்கள் கொண்ட அசுரனை வதம் செய்யும் வைபவத்தில், குழந்தைவேலாயுத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.ஏற்பாடுகளை செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் செய்திருந்தார்.