பேரம்பாக்கம் :லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், சுவாதி திருநாளான நேற்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பேரம்பாக்கம் அடுத்த, நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், 14ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோவிலில், நரசிம்ம பெருமாள் தாயாரை அணைத்த கோலத்தில் ஏழரை அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். செவ்வாய் மற்றும் நாகதோஷ பரிகாரத் தலமாக விளங்கும், இங்கு மாதந்தோறும், பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதியன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். இம்மாதம் நேற்று, காலை 10 மணிக்கு மூலவர் நரசிம்ம பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து யாக பூஜை நடந்தது. பகல் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, பெருமாளை தரிசித்துச் சென்றனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை, ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி சேவா சபா டிரஸ்ட் ஏற்பாடு செய்தது.