பொள்ளாச்சி :பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் வெள்ளித்தேரோட்ட திருவிழா அடுத்த மாதம் ஏழாம் தேதி துவங்குகிறது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா நோன்பு சாட்டுதலுடன் இன்று துவங்குகிறது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடக்கிறது. வரும் 21ம் தேதி இரவு 10.00 மணிக்கு கோவில் முன்பு "திருக்கம்பம் நடப்படுகிறது. வரும் 28ம் தேதி முதல் கோவில் பூவோடு துவங்குகிறது. வரும் 2ம் தேதி கிராமசாந்தியும், மறுநாள் கொடிகட்டுதல் ஆகியவை நடக்கிறது. அம்மனுக்கு விரதமிருக்கும் பக்தர்கள் வரும் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஒவ்வொரு பகுதி மக்களும் பூவோடு எடுத்து அம்மனுக்கு வழிபாடு நடத்துவர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அடுத்த மாதம் ஏழாம் தேதி காலை 6.00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு படைத்து அம்மனை வழிபாடு செய்கின்றனர். காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ வைபவம் நடக்கிறது. மாலை 7.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் எழுந்தருளும் அம்மன், முக்கிய பகுதிகளின் வழியாக உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, இரு நாட்களுக்கு பொதுமக்களின் தரிசனத்திற்காக தேர் நிறுத்தத்தில் தேர் நிறுத்தப்பட்டு, 9ம் தேதி இரவு 7.00 மணிக்கு மீண்டும் தேர் கோவிலில் நிலைக்கு வந்தடைகிறது. பின், இரவு 10.00 மணிக்கு பாரிவேட்டை மற்றும் தெப்பத்தேர் வைபவம் ஆகியவை நடக்கிறது. அடுத்த மாதம் 10ம் தேதி காலை 8.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 9.00 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 12ம் தேதி இரவு 8.00 மணிக்கு மகா அபிஷேகத்துடன் தேர் திருவிழா நிறைவடைகிறது. விழாவையொட்டி, சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாட்டினை கோவில் செயல் அலுவலர் நாகையா உட்பட பலர் செய்து வருகின்றனர்.