பதிவு செய்த நாள்
19
நவ
2018
01:11
பு.புளியம்பட்டி: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, மண் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. புன்செய்புளியம்பட்டியை அடுத்த காவிலிபாளையம், அலங்காரிபாளையத்தில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 50 ஆண்டுகளாக மண்பாண்ட தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் சீசனுக்கு தகுந்தவாறு, சுவாமி சிலைகள், மண் பொம்மைகள் மற்றும் கார்த்திகை தீப விளக்கு தயாரிக்கின்றனர். வரும், 23ம் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, விளக்குகள் தயாரிக்கும் பணியை துவக்கி விட்டனர்.
ஒவ்வொரு குடும்பத்தினரும், தினமும், 1,000 விளக்குகள் வரை, தயாரிக்கின்றனர். ஆயிரம் விளக்குகள், 700 ரூபாய்க்கு விற்கின்றனர். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, கோவை, திருப்பூர்
பகுதி வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளி ஆறுமுகம் கூறியதாவது: கடந்த, 1985ம் ஆண்டு வரை, தொழில் மிகவும் சிறப்பாக இருந்தது. அதன் பின் நலிவடைந்து வருகிறது. ஆண்டு முழுவதும்
பண்டிகை காலங்கள் தவிர்த்து, மற்ற நாட்களில் மண்பாண்டம் செய்வதற்கு, ஆர்டர் வருகிறது. இதனால் தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைக்கிறது. கார்த்திகை தீபம் முடிந்ததும், பொங்கல் பண்டிகைக்கு, மண் பானை தயாரிக்கும் பணியை தொடங்கி விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.