பதிவு செய்த நாள்
23
நவ
2018
11:11
திருப்பதி, திருமலையில், ஏழுமலையான் திருவாபரணங்களை கணக்கிடும் பணி, நேற்று முதல் துவங்கியது. ஆந்திராவில் உள்ள, திருமலை, திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி, சீனிவாசராஜு கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், ஏழுமலையான் திருவாபரணங்கள் கணக்கிடும் பணி, தேவஸ்தானத்தில் நடக்கிறது. பழங்காலத்து ஆபரணங்கள் முதல், தற்போது ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆபரணங்கள் வரை கணக்கிட்டு, அவற்றின் மதிப்பு, நகைகளில் உள்ள கற்களின் எடை, அவற்றின் எண்ணிக்கை அனைத்தையும் சரிபார்த்து, அதை திருவாபரண பதிவேட்டில் குறித்து வைப்பது வழக்கம்.அதன்படி, நேற்று முதல், நகைகள் கணக்கிடும் பணி துவங்கியது. இந்த பணி, 15 நாட்கள் நடக்க உள்ளது. திருமலையில், கன மழை பெய்து வருவதால், திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதையில், மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள், மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.