பதிவு செய்த நாள்
23
நவ
2018
03:11
கோவை, -சபரிமலையில் பக்தர்கள் வரக்கூடாது; அழிக்க வேண்டும் என்ற திட்டத்தோடு கேரள அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, என, மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.
கோவையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:நாங்கள் சபரிமலை க்கு போயிருந்தபோது, அப்பகுதியே வெறிச்சோடி போயிருந்தது. பக்தர்கள் யாரும் இல்லை. நிலக்கல் பேருந்து நிலையத்திலும் மிக சொற்பமான அளவிலேயே ஆட்கள் இருந்தனர். தனியார் வாகனங்களை அனுமதிக்க மறுத்தது குறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, சாலை மோசமாக இருக்கிறது. நிலச்சரிவு அதிகம் என்பதால் அனுமதிக்க முடியாது என்றனர். எனக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லை.சபரிமலையில் கண்ட காட்சிகளை, எந்த மனிதராலும் தாங்க முடியாது. யுத்த களம் போல, அவ்வளவு மோசமான நிலையில் சபரி மலை இருந்தது. எந்த காவல்துறை அதிகாரியும் மனிதாபிமான நோக்கத்தோடு பக்தர்களை அணுகியதாக தெரியவில்லை.
பத்தினம்திட்டா எஸ்.பி., தாங்கள் மாஸ்டர் பிளான் போட்டிருப்பதாக எங்களிடம் சொன்னார். அது கோவிலை அழிக்கக்க்கூடிய மாஸ்டர் பிளானாகதான் இருக்க வேண்டும்.சபரிமலையில் தீபாராதனை காட்டியவர்கள், கற்பூரம் ஏற்றியவர்கள் மீதெல்லாம் வழக்கு போட்டதாக கேள்விப்பட்டேன். சபரிமலையை அழிக்க வேண்டும்; அங்கு பக்தர்கள் வரக் கூடாது என்று அவர்களுக்கான வசதிகளை குறைத்துக் கொண்டே வருகின்றனர்.மத்திய அமைச்சரான எனக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்கள் மாலை போட்டுக்கொண்டு சென்றால், எப்படி நடத்துவார்கள் என்று எண்ணி பாருங்கள்.
கஜா புயல் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களுக்கும், புயல் பாதித்த ஆறு மணி நேரத்துக்குள் நான் சென்றேன். அன்றைக்கு நடந்த விஷயங்களை பார்க்கும்போது மிகச்சிறப்பாக செய்திருந் தார்கள். சில இடங்களில், சில குறைகளை மக்கள் சொன்னார்கள். சிலர் இதை அரசியல் ஆக்குகின்றனர். அதிகாரிகளை மறியல் செய்து தடுத்து நிறுத்தினால், அவர்களுக்குதான் நஷ்டம்.இவ்வாறு, அவர் கூறினார்.