கரூர்: கரூர் அன்னகாமாட்சியம்மன் கோவிலில் நடந்த பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் நகரில் பிரசித்தி பெற்ற அன்னகாமாட்சியம்மன் கோவிலில் 89வது ஆண்டு விழா, நேற்று முன்தினம் மாலை அமராவதி ஆற்றிலிருந்து கரக ஊர்வலத்துடன் வெகு விமர்சையாக துவங்கியது. நேற்று காலை ஒன்பது மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை காமதேனு வாகனத்தில் அன்ன காமாட்சியம்மன் திருவீதியுலா நடந்தது. இன்று (15ம் தேதி) மதியம் 1.30 மணிக்கு மாவிளக்கு பூஜை, மாலை ஆறு மணிக்கு கரகம் ஆற்றுக்கு எடுத்து செல்லுதல், இரவு ஒன்பது மணிக்கு நேதாஜி சோஷியல் சர்வீஸ் சொசைட்டி சார்பில் கிராமத்து தென்றல் பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.