பதிவு செய்த நாள்
24
நவ
2018
12:11
மேட்டுப்பாளையம்:குட்டையூர் அருகே உள்ள மாதேஸ்வரன் கோவிலில், கார்த்திகை தீபம் நேற்று ஏற்றப்பட்டது.மேட்டுப்பாளையம் - காரமடை ரோடு, குட்டையூர் அருகே மலை உச்சியில், மாதேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று காலை, 4:30க்கு நடை திறக்கப்பட்டது; 5:00க்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. காலை, 11:30க்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்தனர். மாலை, 5:00க்கு கோவில் முன்புள்ள கருட கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
மலை உச்சியில் உள்ள, 108 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில், 100 லிட்டர் நெய் ஊற்றி, 100 மீட்டர் காடா வெள்ளை துணியை திரியாக வைத்தனர். மாலை, 6:00க்கு அர்ச்சகர் தீபம் ஏற்றினார். ஓம் நமச்சிவாய அறக்கட்டளை குழுவினர் அன்னதானம் வழங்கினர். பின், வான வேடிக்கை நடந்தது. கார்த்திகை தீபம் இரவு பகலாக, 11 நாட்கள் எரிந்து கொண்டிருக்கும்.இதேபோல், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் மற்றும் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலிலும், சத்தியமூர்த்தி நகரில் உள்ள மாதேஸ்வரன் கோவிலிலும் கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான பெண்கள், நகரில் உள்ள கோவில்களுக்கு சென்று தீபம் ஏற்றி, சுவாமியை வழிபட்டனர்.