பதிவு செய்த நாள்
16
பிப்
2012
10:02
வத்திராயிருப்பு :வத்திராயிருப்பு அருகே அழகிய மணவாளப்பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணி,"தினமலர் செய்தி எதிரொலியாக, பாலாலய வைபவத்துடன் துவங்கியது. வத்திராயிருப்பு அருகே அர்ஜூனா நதிக்கரையில், அழகிய மணவாளப் பெருமாள் கோயில் உள்ளது. இப்பகுதியை ஆண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்ற மன்னரால் புனரமைக்கப்பட்டது. மன்னன் சைவ சமயத்தை வளர்த்த போதிலும் ,அதற்கு ஈடாக வைணவ மதத்தையும் போற்றி பாதுகாத்தார் என்பதற்கு ,இக்கோயில் சான்றாக உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில், அழகிய கலைநயம் மிக்க சிற்பங்கள், தூண்கள் உள்ளன. 10 ஏக்கரில் கோயிலும், அதன் எதிரே உபன்யாச மண்டபமும் அமைந்துள்ளது. நீண்ட ஆண்டுகளாக பராமரிப்பில்லாததால், உத்திரக்கற்களும், சுற்றுச்சுவர் கற்களும் பெயர்ந்தன. பக்கவாட்டு சுவர்கள் சரிந்தன. கோயில் கருவரை, கோபுரம் உட்பட அனைத்து பகுதிகளும் சிதைந்து, புதர்மண்டியது. இங்கு பக்தர்கள், ஆபத்தான நிலையிலும் வழிபட்டு வந்தனர். சிறப்புமிக்க இதன் கோயில், தனது வரலாற்று பதிவுகளை இழந்து, மண்ணோடு மண்ணாகியது பக்தர்களை மிகுந்த வேதனையடைய செய்தது. இது தொடர்பாக, 2011 டிச. 12 "தினமலர் இதழிலில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, கோயிலை புதுப்பிக்க, அறநிலையத்துறை, பக்தசபை இணைந்து, ரூ. 1.50 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்தனர். அறநிலையத்துறையானது இதற்காக முதல்கட்டமாக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்தது. மேலும் பக்தர்கள், நன்கொடை உதவியுடன் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பாலாலயம் அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் முன்னிலையில் நடந்தது. மூலவர் சிலையிலிருந்து சக்தி எடுக்கப்பட்டு, உற்சவருக்கு ஏற்றப்பட்டது. மூலவர் சிலை இடமாற்றம் செய்யப்பட்ட பின், சிற்பங்களுக்கும், கட்டுமான கற்களுக்கும் எண் குறிப்பிடும் பணிகள் நடந்தன. பக்தசபா அமைப்பாளர் குமார், அறநிலையத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.