பதிவு செய்த நாள்
16
பிப்
2012
10:02
மதுரை :ஐ.எஸ்.ஐ., தரச்சான்றிதழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் தேவைகள் குறித்து பா.ஜ., ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. மாவட்ட தலைவர் ராஜரத்தினம், கட்சி இந்து சமய அறநிலைய பிரிவு தலைவர் ஹரிஹரன் மற்றும் நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கோயிலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நிலையில், கோயிலை சுற்றியுள்ள பூங்காவில் விளக்குகள் எரிவதில்லை. கை, கால்களை சுத்தம் செய்துவிட்டு, கோயிலுக்கு செல்வது இந்து மதத்தினரின் உணர்வு. இதற்காக கோயிலுக்கு செல்வதற்கு முன், கை,கால்களை சுத்தம் செய்ய குழாய்கள் அமைக்க வேண்டும். இலவச காலணி பாதுகாப்பு இடங்களில், வற்புறுத்தி கட்டணம் கேட்கின்றனர். சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் வாசல்களில், உடலை தடவி, சோதனை செய்வதற்கு பதில், நவீன ஸ்கேனிங் கருவி நிறுவி, சோதனை செய்ய வேண்டும். கோயிலில் திருமண கட்டணம் ரூ.100, அர்ச்சனை கட்டணம் ரூ.10 வசூலிப்பதோடு, "கோயில் வரலாறு புத்தகம் வாங்க வேண்டும் என வற்புறுத்தி, மொத்தம் ரூ.210 வசூலிக்கின்றனர். எளியமுறையில், திருமணம் செய்ய வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது. கோயில் சிறப்புகள், வரலாறு குறித்த விபரங்கள் அடங்கிய தொடுதிரை கம்ப்யூட்டர் பழுதாகியுள்ளது. சில்லரை வழங்கும் இயந்திரமும் பழுதாகியுள்ளது. உடனடியாக சரிசெய்ய வேண்டும். அம்மன், சுவாமி சன்னதிக்கு ரூ.100 கட்டணத்திற்கு பதில், சிலர் வெளியூர் பக்தர்களிடம் ரூ.200 வசூலிக்கின்றனர். இதை தடுக்க, கம்ப்யூட்டரில் பதிவு செய்து ரசீது தரவேண்டும். "கோயில் மாதிரி வடிவத்தை புதுப்பிக்க வேண்டும். கும்பாபிஷேகத்தின்போது, சுவாமி சன்னதி சுற்றுப்பிரகாரத்தில் இருந்த மேத்தா தட்சிணாமூர்த்தி சிலை, காலபைரவர் சிலை அகற்றப்பட்டது. தற்போது இதன் நிலை குறித்து கோயில் நிர்வாகம் விளக்க வேண்டும். போலி பெயர்களில் பராமரிக்கும் கோயில் சொத்துக்களை மீட்கவேண்டும். பிர்லா தங்கும் விடுதியில் தங்க பக்தர்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். சித்திரை வீதிகளில் விதிமீறிய கட்டடங்களை இடிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.