பதிவு செய்த நாள்
30
நவ
2018
12:11
திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே சித்தப்பட்டி கிராமத்தில் மண்ணில் புதைந்த சிற்பங்கள் 12ம் நுாற்றாண்டை சேர்ந்தவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வேலாயுதராஜாவும், கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரனும் சித்தப்பட்டியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்கள் கூறியதாவது:சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் கண்மாய் கரையில் புதைந்திருந்த சிவலிங்கத்தை இளைஞர்கள் தோண்டி எடுத்து ஓட்டு கூடத்தில் வழிபட்டு வருகின்றனர். கண்மாயின் கிழக்கு கரையில் 2 அடி ஆழத்தில் சதுர ஆவுடையுடன் கூடிய லிங்கமும் அதன் எதிரே நந்தியும், கோவில் கூடத்தின் தென் புறத்தில் மண்ணில் புதைந்த நிலையில் தலை மட்டுமே தென்படும் சில சிலைகளும் ஆய்வு செய்யப்பட்டது. சதுர வடிவ ஆவுடையுடை லிங்கம், நந்தி சிலைகள் மற்றும் அய்யனார் கோவில் அருகில் நின்ற நிலையிலான பெருமாள் சிற்பம் 12 நுாற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால சிற்பங்கள் என்பது தெரியவந்துள்ளது.உடன் விஷ்ணு சமபாதத்தில் நின்ற நிலையிலும், நான்கு திருக்கைகளுடன் விளங்கும் திருமால், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். சங்கு சிதைந்துள்ளது. பெருமாள் சிலை வலது முன் கரம் வரத முத்திரையும், இடது முன் கரம் தொடையில் வைத்தவாறு ஊரு முத்திரையும் காட்டுகின்றன. கிரீட மகுடத்தோடு இச்சிற்பம் காணப்படுகிறது. விஷ்ணுவின் காதுகளில் மகர குண்டலங்கள், கழுத்தில் பட்டையான கழுத்தணிகள் , மார்பின் குறுக்கே முப்புரி நுால், விலாவில் உதரபந்தம், தோள்களில் தோள்வளை, மேற்கைகளில் கேயூரம் , மணிக்கட்டில் கடகவளை, வளையல் ஆகிய அணிகலன்களை அணிந்துள்ளன. பெருமாள் சிற்பத்திற்கு 100 மீ தொலைவில் விஷ்ணு கோவில் எல்லையைக் குறிக்கும் திருவாழிக்கல் ஒன்றும் காணப்படுகிறது. இக்கல்லை இங்குள்ள மக்கள் காளியாக வழிபடுகின்றனர். இவ்விரு சிற்பங்களை பார்க்கும்போது இப்பகுதியில் சிவன் கோவிலும், அதன் அருகில் பெருமாள் கோவிலும் இருந்திருக்கலாம். காலப்போக்கில் கோவில் இடிந்து தற்போது அதில் உள்ள சிற்பத்தை மட்டும் எடுத்து வழிபடுகின்றனர். இங்குள்ள சிவனை சித்தேஸ்வரமூர்த்தியாக வழிபடுகின்றனர். மண்ணில் புதைந்து கிடக்கும் சிற்பங்களை தோண்டிப் பார்த்தால் இக்கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள முடியும் என்று கள ஆய்வாளர்கள் கூறினர்.