பதிவு செய்த நாள்
11
டிச
2018
01:12
சினிமாவில் நிறைய பின்னணி பாடல்கள் பாடி, புகழுடன் விளங்கும் மஹதி, முறையான கர்நாடக இசை கச்சேரியை, அதன் க்ரமம் கெடாமல் வழங்கியது மெச்சத் தகுந்தது.கல்யாணி அட தாள வர்ணத்துடன் துவங்கி, ஜோதிஸ்வரூபிணி ராக ஆலாபனையை, அதன் விவாதித்வ தன்மை வெளிப்படுமாறு முக்கிய, ஸ்வர நிறுத்தல்களிலும், ராகத்துக்கே உரித்தான, வசீகரிக்கும் பிரயோகங்களிலும் அறிவுறுத்தினார்.
அவர் பாடிய பாடல், வாலாஜாபெட் வெங்கட்ரமண பாகவதரின் ஆனந்தமய மனவே! சற்றுத் தள்ளி விவரித்த, காம்போதி ஆலாபனை, அதன் தன்மையையொட்டி, அதற்காக காக்கப் பட வேண்டியவற்றையும் நிலை நிறுத்தியது.தேர்வு செய்த ராகங்களுக்குத் தக்கபடி, அவற்றிற்கான எல்லைக் கோட்டில் விளங்கிய ஆலாபனைகள் மிகச் சிறப்பு. கச்சேரியில், பாடல்களுக்கு இடையில், ஒரேயடியாக சப்தம் இருக்கிறதா என, ரசிகர்களிடம் வினவி, அதைக் கட்டுப்படுத்தச் சொன்னது, பாடகர் எந்த அளவிற்கு ரசிகர்கள் மீது அபிமானம் வைத்துள்ளார் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.
தியாகராஜரின், ஜகன்மோஹினி ராகத்தில் வரும், சோபில்லு சப்தஸ்வர க்ருதியையும், விஜஸ்ரீ ராகத்தில் வரும், வரநாரத என்ற பாடலையும், அதிதுரிதமாகப் பாடினார். இதில், இரண்டாவதில் சில இடங்களில், சாஹித்யமே நம்மால் உணர முடியாமல் போயிற்றோ என்ற நெருடல் உள் மனதில் தோன்றியது.கற்பனை ஸ்வரங்களில் நல்ல தேர்வுடன் விளங்கும் மஹதி, இவற்றை பல கோணங்களில் அமைத்துப் பாடியதும், அவற்றைப் பிரதிபலித்து வயலினில் வாசித்தார், எல்.ராமகிருஷ்ணன். கச்சேரியில் மிகுந்த சுவாரஸ்யமான இடம் இது.
மற்றபடி, மிருதங்க வித்வான், விஜய் நடேசனும், கடம் வாசித்த கார்த்திக்கும், தனி ஆவர்தனத்தில் திறமைசார் கணக்கு விஷயங்களில், தங்களை ஈடுபடுத்திக் கொண்டது, இவர்களை ஆட்கொண்டிருக்கும் லய ஆர்வத்தினைக் காட்டியது. இந்தக் கச்சேரி, முத்ராவின் ஆதரவில், தி.நகர் இன்போஸிஸ் ஹாலில் நடந்தேறியது.
நிதானத்தை கையாண்ட பிரவீன், ஷ்ரேயாநாத இன்பம் அமைப்பின் ஆதரவில், ராகசுதா ஹாலில் நடந்த, தனி வயலினிசைக் கச்சேரியில், யதுகுல காம்போதி ராகத்தையும், அதைத் தொடர்ந்து, அம்ப காமாக்ஷி என்ற ச்யாமா சாஸ்திரியின் ஸ்வரஜதியையும் வாசித்தார், ஷ்ரேயா தேவ்நாத்.ராக வாசிப்பின் போதிருந்த அமைதி, பாட்டு வாசித்த போதும் தொடர்ந்தது. பாட்டானது, இந்த ராகத்தின் ஆலாபனையிலிருந்து, சுயம்புவாக உதித்தது போன்ற எண்ணத்தையே ஏற்படுத்தியது.
இது, இங்கு மட்டுமின்றி, முக்கியமாக தேர்வு செய்த, கீரவாணி ராக வாசிப்பில், கலிகியுண்டே கதா பாட்டிலும் தெரிந்தது.கச்சேரி முழுவதிலும், மிருதங்கம் வாசித்த, பிரவீன் ஸ்பர்ஷ் அதிக சப்தமும் எந்த விதமான ஆர்ப்பாட்டமுமே இல்லாமல், முழு மென்மைத் தன்மையுடன் வாசித்தது, முதலில் நிதானத்தைத் தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட பிறகே, இவ்வாறான சாதனைகளுக்கு இறங்க முடியும் எனும் பழைய கோட்பாடை ஞாபகப்படுத்தியது.
ஷ்ரேயா, சற்றே துள்ளல் நடையுடன், ஊர்மிகா ராகத்தில் அமைந்த, பல்லவி சேஷய்யரின், எந்தனிவினவிந்துரா மற்றும் பட்டணம் சுப்பிரமண்ய அய்யரின், ஷண்முகப்ரியா க்ருதியான, மரிவேறதிக்கெவரய்ய ஆகிய பாடல்களையும் வாசித்தார்.
இவ்விருவரும், சமீபத்தில் திருமணமானவர்கள். இல்லறமாகிய நல்லறம் புகுந்த பின், இவர்கள் ஒரே மேடையில் சேர்ந்து வாசிக்கும் முதல் கச்சேரி இதுவாகும்.-- எஸ்.சிவகுமார்