பதிவு செய்த நாள்
11
டிச
2018
02:12
சாணார்பட்டி:சாணார்பட்டி ஒன்றியம் திம்மணநல்லூர் ராமராஜபுரத்தில் வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று முன்தினம் (டிசம்., 9ல்) காலை கணபதி ஹோமம், புண்யாகவாஜனம், மஹாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமத்துடன் விழா துவங்கியது. பகலில் விநாயகர் வழிபாடு, தேவராட்ட நடனத்துடன் தீர்த்தம் அழைப்பு நடந்தது. மாலையில் தேவதா அனுக்ஞை, யாகசாலை பிரவேசம், நாலாயிர திவ்யபிரபந்தம் உட்பட முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தது.நேற்று மூன்றாம் கால யாக பூஜை, கடம் புறப்பாடை தொடர்ந்து முக்கிய தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தம் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் மருதராஜ், ஆண்டியம்பலம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராமராசு, முன்னாள் நத்தம் தொகுதி செயலாளர் கண்ணன், முன்னாள் அம்மா பேரவை இணை செயலாளர் சுப்பிரமணி, தி.முக., மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன், தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளம்வழுதி உட்பட திரளானோர் விழாவில் பங்கேற்றனர். இரவு கிராமிய இசை நிகழ்ச்சி நடந்தது. வெங்கடாஜலபதி கோயில் விழாக் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.