பதிவு செய்த நாள்
12
டிச
2018
12:12
விக்கிரவாண்டி:பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி தரும் விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.பண்டைய காலத்தில், விக்கிரமாதித்த சதுர்வேதி மங்களம் என்றும், பின்னர் விக்கிரமாதித்தபுரம், விக்கிரமபாண்டி என மருவி தற்போதைய விக்கிரவாண்டி பேரூராட்சியில் முத்தாலம்மன், அமைச்சாரம்மன், எல்லையம்மன், சந்தவெளி முத்துமாரியம்மன் ஆகிய சக்திகளின் ஒரே அம்சமாக முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவில் கடந்த 1913ம் ஆண்டு புதுப்பித்து கும்பாபிஷேகம் நடந்தது. பின், 1994ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தினர்.தற்பொழுது கிராம பொதுமக்கள், குலதெய்வ வழிபாட்டுகாரர்கள் மற்றும் சமீபத்தில் மறைந்த விக்கிரவாண்டி ஜெயராமன் என்பவரின் பெரு முயற்சியால் கடந்த 2014ம் ஆண்டு பல்வேறு சமூகத்தினருடன் திருப்பணி குழு அமைத்து, பழைய கோவிலை அகற்றிவிட்டு, கோவில் பிரகாரத்தை அகலப்படுத்தி திருப்பணியை ஆரம்பித்தனர்.
தற்பொழுது கோவிலில் புதிதாக மூன்று நிலைகள் உடைய ராஜகோபுரம், மகா மண்டபம் அமைத்து, பழைய கருவறையை உயர்த்தி அர்த்த மண்டபம், ஸ்தாபன மண்டபம், அன்னையின் கருவறை அமைத்து அதில் நிலையம்மன், அன்னை முத்துமாரியம்மன் பீடம் அமைத்துள்ளனர்.ஸ்தாபன மண்டபத்தில் உற்சவரையும், கருவறை வாயிலில் வலது புறம் பால கணபதியும், இடது புறம் பாலமுருகனுக்கு சிறிய சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் தென் மேற்கு திசையில் விநாயகர் சன்னதியும், அதையடுத்து வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியர் சன்னதியும், தெற்கு திசையில் தட்சிணாமூர்த்தி சன்னதியும், வடமேற்கு திசையில் நாகதேவதையும், அதையடுத்து மகாலட்சுமி, சரஸ்வதிக்கு தனித்தனி சன்னதிகள் அமைத்துள்ளனர்.வடக்கு திசையில் துர்க்கைக்கு சன்னதி, வடகிழக்கு திசையில் நவகிரக சன்னதி அமைத்துள்ளனர். கோவில் சுற்றுப்பிரகார சுவற்றில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், அம்மன்கள், விஷ்ணு அவதாரம், பள்ளி கொண்ட பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் சிற்பங்கள் அமைத்து, கண்ணை கவரும் வண்ணங்கள் பூசி மெருகூட்டப்பட்டுள்ளன.முத்துமாரியம்மன் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் தங்களால் தீர்க்க முடியாத அனைத்து பிரச்னைகளையும் இங்கு வேண்டிக் கொண்டால், அன்னையின் அருளால் நிறைவேறி விடுவதால் அன்னைக்கு விழுப்புரம், கடலுார், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறது.இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத முதல் வெள்ளி உற்சவமும், ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளி உற்சவமும் சாகை வார்த்தல் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.2 கோடி ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள இக்கோவில் கும்பாபிஷேகம் இன்று(12ம் தேதி) காலை 9:00 மணி முதல் 10.30 மணிக்குள் மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சாமிகளால் கோவில் கலசத்திற்கும், ராஜகோபுரத்திற்கும், கோவில் பிரகாரத்திலுள்ள அனைத்து சன்னதிகளுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.