பதிவு செய்த நாள்
14
டிச
2018
02:12
கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரத்தில் காணாமல் போன 10 நூற்றாண்டைச் சேர்ந்த சல்லேகனைக் கல் துாண்களை கண்டுபிடித்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமணப் பள்ளிகள், கோவில்கள், படுக்கைகள் மற்றும் சின்னங்கள் உள்ளன. தற்போது சமண மதத்தினை பின்பற்றுபவர்கள், இப்பகுதிகளில் தற்போது அதிகளவில் வசிக்கவில்லை. இதனால், இச்சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை மறைந்துவிட்டது.குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியில் 10ம் நுாற்றாண்டு காலத்தில் நிறுவப்பட்ட 3 கல்துாண்கள் இருந்ததாக பேராசிரியர் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.பழங்கால கல்வெட்டு ஆய்வாளரான பேராசிரியர் ரமேஷ் எழுதியுள்ள நடுநாட்டில் சமணம் என்ற நுாலில், 10 ம் நுாற்றாண்டு காலத்தில், கண்டாச்சிபுரம் பகுதி சமண முக்கியத்துவம் வாய்ந்த ஊராக இருந்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது சல்லேகனைக் கல் எனப்படும் வடக்கிருந்த உயிர் நீத்த பெண்கள் குறித்த கல்வெட்டுக்கள் அடங்கிய கல்துாண்கள மூன்றில் இரண்டு கல்துாண்களைக் காணவில்லை. மேலும் ஒரு துாண் கழிவு நீர் வாய்க்கால்களுக்கு அருகில் உள்ளது. இந்த சல்லேகனைக் கல்லை எடுத்து முறையாக பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக இச்சின்னங்களை அருகில் உள்ள கோவில்களில், இது குறித்த குறிப்புகளுடன் பாதுகாக்க வேண்டும். இதன் மூலம், இப் பகுதியின் தொன்மை குறித்து பொதுமக்களும், மாணவர்களும் அறிந்து கொள்ள உதவியாக அமையும்.மேலும் கண்டாச்சிபுரம், கூவனுார், வசந்த கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளில் உள்ள சமணக்குறிப்புகள் அடங்கிய கற்களையும் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு, வரலாற்று ஆர்வலர்கள், தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் முயற்சிகள் மேற்கொள்வது அவசியம்.