பதிவு செய்த நாள்
17
டிச
2018
03:12
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, திருச்சியில் இன்று முதல் (டிசம்., 17ல்)போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா கடந்த, 7ல் துவங்கியது. தொடர்ந்து, பகல்பத்து உற்சவம் நடந்தது. நாளை காலை, பரமபத வாசல் திறக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருவர் என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, இன்று (டிசம்., 17ல்) இரவு, 8:00 மணி முதல், நாளை (டிசம்., 18ல்) பகல், 2:00 மணி வரை பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஸ்ரீரங்கம் வந்து செல்லும் பஸ்களுக்கும், லால்குடி, மண்ணச்சநல்லூர் மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கும் வழித்தட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், அனுமதிச் சீட்டு பெற்று வரும் வாகனங்களை, வடக்கு சித்திரை வீதியில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி சீட்டு பெறாத வாகனங்களை, தேசிய கல்லூரி - பள்ளி மைதானம், மூலத்தோப்பு, கொள்ளிடக்கரை போன்ற இடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கனரக மற்றும் சரக்கு வாகனங்கள்: கரூர் மார்க்கத்திலிருந்து திருச்சி வரும் கனரக சரக்கு வாகனங்கள், நெம்பர் 1 டோல்கேட், சென்னை பைபாஸ் சாலை வழியாகவும், தஞ்சை, புதுக்கோட்டையிலிருந்து கரூர் மார்க்கத்தில் செல்லும் வாகனங்கள், பால்பண்ணை ரவுண்டானா, சஞ்சீவி நகர், ஒய் ரோசூடு சந்திப்பு, நெம்பர் 1 டோல்கேட் வழியாகவும் திருப்பி விடப்படும்.