பதிவு செய்த நாள்
24
டிச
2018
02:12
கோவை:ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹா சுவாமி, கோவை ராம்நகர் ஐயப்ப பூஜா சங்கத்தில் பக்தர்களுக்கு நேற்று (டிசம்., 23ல்) அருளாசி வழங்கினார்.கர்நாடக மாநிலம், சிக்மகளூரு, ஹரிஹரபுரம் ஸ்ரீமடத்தின் பீடாதிபதி ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹா சுவாமி, கோவை ராம்நகர் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள ஐயப்ப பூஜா சங்கம் மஹரஜோதி மஹாலுக்கு, வெள்ளிக்கிழமை வருகை தந்தார். அவருக்கு பக்தர்களும், ஐயப்ப பூஜா சங்க நிர்வாகிகளும், பூர்ணகும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர்.ஐயப்ப பூஜா சங்கத்தில், கடந்த இரு தினங்களாக பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
நேற்று (டிசம்., 23ல்) காலை, 7:30 மணி முதல் 8:30 மணி வரை சந்திர மவுலீஸ்வரர் பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு, சுவாமி பக்தர்களின் கோரிக்கையை கேட்டறிந்து, நிவாரணம் தெரிவித்ததோடு, மலர்களையும், கனிகளையும் பக்தர்களுக்கு அளித்து, அருளாசி வழங்கினார்.
தொடர்ந்து, பக்தர்களுக்கு தீர்த்தபிரசாதமும், மந்திரதீட்சிதையும் வழங்கப்பட்டது.மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சுவாமி தலைமையில், ஸ்ரீ சக்கர நவாவர்ணபூஜை நடந்தது. தொடர்ந்து, பாதபூஜையும், பிக் ஷா வந்தனமும் நடந்தது. இன்றும், நாளையும் (டிசம்., 24, 25ல்), ஆர்.எஸ்.புரம், மேற்கு திருவேங்கடசாமி சாலையிலுள்ள காமாட்சியம்மன் கோவிலில் சுவாமி, பக்தர்களுக்கு தரிசனமும், ஆசியும் வழங்குகிறார்.