பதிவு செய்த நாள்
25
டிச
2018
01:12
சபரிமலை,:தமிழக பெண்களை தொடர்ந்து, நேற்று (டிசம்., 24ல்) கேரளாவை சேர்ந்த இரண்டு பெண்கள், சபரிமலையில், சன்னிதானம் வரை வந்ததால், பக்தர்கள் ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் அந்த பெண்களை, பம்பைக்கு திரும்ப அழைத்துச் சென்றனர்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன், கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்ல, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்கள் போராட்டம் நடத்தி வருவதால், சபரிமலையில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், தமிழகத்தின், சென்னை, மனிதி என்ற அமைப்பைச் சேர்ந்த பெண்கள், 11 பேர், நேற்று முன்தினம் (டிசம்., 23ல்) பம்பையில் இருந்து, சன்னிதானம் செல்ல முற்பட்டதால், பெரும்
போராட்டம் நடந்தது. இதையடுத்து, 11 பேரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.இந்த பதற்றம் தணியும் முன், கேரள மாநிலம், தலசேரி தனியார் கல்லூரி பேராசிரியை, பிந்து அம்மிணி, 42, அரசு ஊழியரான, கண்ணுாரைச் சேர்ந்த, கனகதுர்கா 40, இருவரும், நேற்று (டிசம்., 24ல்) இருமுடிகட்டுடன் பம்பை வந்தனர். போலீஸ் பாதுகாப்புடன், நீலிமலை வழியாக மலையேறத் துவங்கினர்.
இவர்களுக்கு, பம்பையில் பெரிய எதிர்ப்பு இல்லை. நீலிமலை கடந்து, அப்பாச்சிமேடு வந்த போது, பக்தர்கள் சரண கோஷமிட்டு, அவர்களை தடுத்தனர். கூட்டம் குறைவாக இருந்ததால், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி, பெண்களை சன்னிதானம் மரக்கூட்டம் பகுதியை கடந்து அழைத்துச் சென்றனர்.சன்னிதானத்திற்கு மிக அருகில், பக்தர்கள் ஏராள மானோர் கூடி, அந்த பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகமானது. கனகதுர்கா மயங்கினார்.
இதைத் தொடர்ந்து, இருவரையும், போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் பம்பைக்குஅழைத்துச் சென்று, அங்கிருந்து கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர்.இருப்பினும் திரும்பி செல்வதற்கு இருவரும் சம்மதிக்கவில்லை. மீண்டும்
சபரிமலை வருவதற்கு, போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என, அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதை அதிகாரிகள் ஏற்று, அவர்களை திரும்ப அழைத்துச் சென்றனர்.
அப்போது, போலீசாருக்கும், பக்தர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் பத்திரிகையாளர்கள் சிலரும் காயமடைந்தனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் (டிசம்., 23ல்) திருப்பி அனுப்பப்பட்ட, மனிதி பெண்கள் அமைப்பினர், முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க, நேற்று (டிசம்., 24ல்) திருவனந்த புரத்துக்கு ரயிலில் வந்தனர்.இதையறிந்த, பா.ஜ., வினர், ரயில்வே ஸ்டேஷனில் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார், அவர்களை வந்த ரயிலிலேயே, திருப்பி அனுப்பினர். மண்டல பூஜை துவங்க உள்ள நிலையில், பெண்கள் அடுத்தடுத்து வருவதில் சதி உள்ளது என்றும், இதுபற்றி முழுஅளவில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், தேவசம்போர்டு தலைவர், பத்மகுமார் கூறினார்.