பதிவு செய்த நாள்
25
டிச
2018
01:12
அருப்புக்கோட்டை : நூற்றாண்டை கடந்த அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ., சர்சில் இன்று டிச 25 ல் , கிறிஸ்மஸ் விழா கோலகலமாக கொண்டாடப்படுகிறது.
அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் உள்ளது சி.எஸ்.ஐ., சர்ச். 1918 ல் அடிக்கல் நாட்டப்பட்ட இது சாதி, மதம் கடந்து அனைத்து மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது . தேவாலயம் கட்ட 20 ஆயிரம் ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்படிருந்தாலும் 23 ஆயிரத்து 565 ரூபாய் 2 அனா, 10 பைசா செலவு ஆனது. இன்ஜினியர் லாசன் சர்சை சிலுவை வடிவம் போல் வரைபடம் அமைக்க அதன்படி கட்டப்பட்டது.
தேவாலயத்தின் திருமேடைக்கு மேல் அமைந்துள்ள வண்ண ஒவியக் கண்ணாடி அமெரிக்கா வின் பாஸ்டன் நகரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. இதில் இயேசு கிறிஸ்துவின் முழு உருவப்படம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய கட்டட கலை நுணுக்கத்துடன் அமைந்துள்ள இதில்,திராட்சை தோட்டத்திற்குள் நின்று கொண்டு கருணை கண்களோடு நோக்கும் இயேசுவின் முகம் கண்ணாடிக்குப் பின் இருந்து வரும் வெளிச்சத்தை உள்வாங்கி பிரகாசமாக தெரிவது இதன் சிறப்பாகும்.ஆயலத்தின் எங்கிருந்து பார்த்தாலும் இயேசு நம்மையே பார்ப்பது போல இருக்கும். சர்சில் இருக்க கூடிய தேவாலய மணி அமெரிக்கா டிராய் நகரிலிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தனிசிறப்பு.. இப்புகழ் வாய்ந்த சர்ச்சில் இன்றுடிச 25 ல் , கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்படுகிறது.
சர்ச் போதகர் எபினேஷர் ஜாஷ்வா கூறுகையில் , ஏழைக்கு இறங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்ற வேத வாக்கியத்திற்கு ஏற்ப இந்த திருச் சபை சமுதாய பணியை முன்னெடுத்து செல்கிறது. கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு இக்கட்டான சூழ்நிலைகளில் பெத்லகேமிற்கு சென்றவர்கள் ஆசிர்வாதத்தை பெற்று கொண்டதை போல், இன்றைக்கும், இனி வரும் நாட்களிலும் இந்த ஆலயத்தை நோக்கி வருபவர்கள் ஆசிர்வாதத்தை பெற்று கொள்வார்களாக, என்றப்படி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினார்.