பதிவு செய்த நாள்
25
டிச
2018
01:12
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில், வரும் ஜனவரியில் நடக்கும் கும்பமேளா, வழக்கத்தை விட, இரு மடங்குக்கு மேல் அதிகமான நிலப்பகுதியில் நடக்கவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடக்கும் கும்பமேளாவில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, லட்சக்கணக்கானோர் பங்கேற்பர்.
இந்த விழா, வழக்கமாக, 20 சதுர, கி.மீ., பரப்பளவு நிலத்தில் நடக்கும். ஆனால், வரும் ஜனவரியில், 45 சதுர, கி.மீ., பரப்பளவு நிலப்பகுதியில், கும்பமேளா நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, பிரயாக்ராஜ் மாவட்ட மேயர், அபிலாஷா குப்தா, நிருபர்களிடம் நேற்று (டிசம்., 24ல்) கூறியதாவது:வழக்கத்தை விட, இந்தாண்டு, அதிகளவிலான பக்தர்கள், கும்பமேளாவில் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், விழா நடக்கும் இடம், 45 சதுர கி.மீ., ஆக விரிவு படுத்தப்பட்டுள்ளது.பிரயாக்ராஜில், கோட்டையின் உட்புறம், புனித ஆலமரம் உள்ளது. ஹிந்துக்களால் புனிதமாக கருதப்படும் இத்தகைய ஆலமரங்கள், இந்தியாவில் நான்கு இடங்களில் மட்டுமே உள்ளன.இந்த மரத்துக்கு, நம் விருப்பத்தை நிறை வேற்றும் சக்தி உள்ளது. இந்த புனித மரத்தை தரிசிப்பதற் காக சிறப்பு பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
முதல் முறையாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தரைவழி, நீர்வழி, வான் வழி மூலம், கும்பமேளாவில் பக்தர்கள் பங்கேற்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.