பதிவு செய்த நாள்
25
டிச
2018
02:12
கிருஷ்ணகிரி: கடந்த, 105 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாத, அங்காளம்மன் கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெரு மக்கள் கூறினர்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், மனு கொடுத்த பின், அவர்கள் கூறியதாவது: பன்னீர்செல்வம் தெரு அங்காளம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மகா சிவன் ராத்திரி மயான கொள்ளை திருவிழா சிறப்பாக நடக்கும். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவில், கடந்த, 1913ல் தனி நபரால் சுண்ணாம்பைக் கொண்டு, கட்டப்பட்டது. பின், 1963 முதல், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், கோவில் கொண்டு வரப்பட்டது. ஆகம விதிப்படி, 12 ஆண்டுக்கு, ஒரு முறை கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால், 105 ஆண்டுகளைக் கடந்தும், கோவில் கும்பாபிஷேகம் நடத்தவில்லை. கோவிலைக் கட்டி, 100 ஆண்டுகளைக் கடந்துள்ளதால், கட்டடம் வலுவிழந்துள்ளது. கோபுரத்தில், செடிகள் முளைத்து, விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.