பதிவு செய்த நாள்
26
டிச
2018
01:12
கோத்தகிரி:நீலகிரியில் வாழும் படுகர் சமுதாய மக்களின் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலமாக துவங்கியது.நீலகிரியில் படுக சமுதாய மக்கள் தொதநாடு, பொரங்காடு, மேற்குநாடு மற்றும் குந்தை சீமைகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதிகளில், ஆண்டுதோறும், படுக சமுதாய மக்கள் தங்களது குல தெய்வமான ஹெத்தையம்மன் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கடந்த, 30 நாட்களுக்கு முன், சக்கலாத்தி என்ற பண்டிகையில் இருந்து, வீடுகளுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர்.
இவ்விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, வாரத்தில், ஞாயிற்றுகிழமை, கிராமத்தில் உள்ள ஹெத்த்தையம்மன் கோவிலில், கத்திகை எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று அம்மனை வணங்கி
வருகின்றனர்.நடப்பாண்டு ஹெத்தையம்மன் திருவிழா, நேற்று முன்தினம் (டிசம்., 24ல்) துவங்கியது. கிராம கோவில்களில் இருந்து, பக்தர்கள் செங்கோல் எடுத்து, கலாசார உடையணிந்து, ஹெத்தையம்மனை மடிமனை என்னும் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
திருவிழா நடைபெறும் பழமை வாய்ந்த பேரகணி, பெத்தளா, ஒன்னதலை, கூக்கல் சின்னக்குன்னூர், எப்பநாடு மற்றும் பெப்பேன் ஆகிய கிராம மக்கள் மடிமனையில் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். விழாவின் முதல் நிகழ்ச்சியாக, கோத்தகிரி கேர்பெட்டா சுத்தக்கல் மற்றும் ஆலுகேருஹண்ணி ஆகிய பகுதிகளில், திருவிழா நடந்தது.
இவ்விழாவில், அம்மன் அருள்வாக்கு, காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, படுக சமுதாய மக்கள் உட்பட, பல்வேறு சமூக மக்களும் விழாவில் பங்கேற்று அம்மனுக்கு காணிக்கை செலுத்தி, வழிப்பட்டனர்.
இவ்விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, இன்று (டிசம்., 26ல்) பேரகணி மடிமனையிலும், வெள்ளிக்கிழமை காத்துகுளி மடிமனையிலும், சனிக்கிழமை ஒன்னதலை மடிமனையிலும் திருவிழா நடக்கிறது.
பல்லாயிரம் பக்தர்கள் விழாவில் பங்கேற்கின்றனர். முக்கிய திருவிழா நாளான, 30 மற்றும் 31ம் தேதிகளில், ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள கிராமங்களில் திருவிழா கோலாகலமாக நடக்கிறது. விழாவில், பக்தர்களுக்கான ஆடல்; பாடல்; நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
திருவிழாவை முன்னிட்டு, படுக சமுாதய மக்கள் வசிக்கும் கிராமங்கள் விழாகோலம் பூண்டுள்ளன.