பதிவு செய்த நாள்
26
டிச
2018
02:12
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி, நேற்று (டிசம்., 25ல்) நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், அலகு குத்தி வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு
வீரப்பன்சத்திரத்தில், மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த, 18ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று (டிசம்., 25ல்), அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், வீரப்பன்சத்திரம் சுற்றுவட்டார பக்தர்கள், தனித்தனிக் குழுவாக, வைராபளையம் காவிரி ஆற்றிலிருந்து, அலகு குத்தி, தீர்த்தக்குடம், பால்குடம், அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். பலர், பறவை அலகு குத்தியும், வேல் அலகு, பறவைக்காவடி அலகு, மயில் அலகு, கத்தி அலகுகளை குத்தியபடி, வந்தனர்.
பெண்கள் பலர், தங்கள் குடும்பத்துக்காக, வேண்டுதல் வைத்து, 20 அடி வேல் அலகு, நாவலகு, சூலாயுத அலகு, குத்தி வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். தீ சட்டி ஏந்தி வந்த பக்தர்கள், அருள் வந்து, ஊர்வலத்தில் ஆடியபடி வந்தனர். அலகு ஊர்வலம் வைராபாளையம் நால்ரோடு, அசோகபுரம், சத்திரோடு, தெப்பக்குளம், உள்ளிட்ட சாலைகளில், சென்று நிறைவாக கோவிலை அடைந்தது. அலகு ஊர்வலம் வந்த பாதை குடியிருப்புகளில், பெண்கள் பலர் வாசலில் மஞ்சள் நீர் தெளித்து, மா கோலமிட்டு, வெற்றிலைபாக்கு, தேங்காய், பழம் வைத்து,
அலகு குத்தி வரும் பக்தர்களின் பாதங்களில், பாத பூஜை செய்து, வழிப்பட்டனர். பக்தர்களின், இந்த ஊர்வலத்தால், வைராபாளையம் தொடங்கி, வீரப்பன்சத்திரம் கோவில் வரை, பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது.