பதிவு செய்த நாள்
26
டிச
2018
03:12
ஈரோடு: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா, நேற்று (டிசம்., 25ல்)கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் (டிசம்., 24ல்) இரவு, 12:00 மணிக்கு, அனைத்து கிறிஸ்தவ தேவாலயங் களில், கிறிஸ்து பிறப்பு அறிவிக்கப்பட்டது.
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில், கிறிஸ்து பிறப்பு திருப்பலியை, ஆலய பங்குத்தந்தை ஜான் சேவியர் நிறைவேற்றினார். ஏசு கிறிஸ்து பிறப்பு நிகழ்வில், கூடியிருந்த கிறிஸ்தவர்கள், தரிசிக்க, ஏசு கிறிஸ்து உருவச்சிலை (சொரூபம்) காண்பிக்கப்பட்டு, குடிலில் வைக்கப்பட்டது.
கிறிஸ்தவர்கள், தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்தை பகிர்ந்து மகிழ்ந்தனர். ஈரோடு சி.எஸ்.ஐ., பிரப் நினைவு ஆலயத்தில், நேற்று (டிசம்., 25ல்) அதிகாலை, 5:00 மணிக்கு, தலைமை ஆயர் கே.சி.ரிச்சர்டு துரை, ஆயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமையில், ஆராதனை நடந்தது. பெத்தானியா ஆலயம், ரயில்வே காலனி, ஆர்.சி., சர்ச்சில், சிறப்பு திருப்பலி நடந்தது.
* புன்செய்புளியம்பட்டி, அந்தோணியார் சர்ச்சில், இன்னிசையுடன் பாடல்கள் இசைக்கப் பட்டன. பாதிரியார் தலைமையில், கூட்டு பிரார்த்தனை நடந்தது. பின்னர், குழந்தை இயேசு ஆராதனை, திருப்பலி, சிறப்பு ஜெபம், வழிபாடுகள் நடந்தன. இதேபோல், பெந்தகொஸ்தே, சி.எஸ். ஐ.,டி.ஈ.எல்.சி., சர்ச்சிலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, தேவாலயங்கள், வண்ணவிளக்குகளால், அலங்கரிக்கப் பட்டிருந்தன.
* அந்தியூர், நகலூர், தவிட்டுப்பாளையம், வெள்ளித்திருப்பூர், அத்தாணி மற்றும் ஆப்பக்கூடல் பகுதிகளில் உள்ள, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
* கொடுமுடி வட்டாரம், மணிக்கூண்டு அருகே இயேசு ரட்சகர் ஆலயத்தில், போதகர் அகஸ்டியன் தலைமையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதையொட்டி, நேற்று (டிசம்., 25ல்) மதியம் 3:00 மணிக்கு, விளையாட்டு போட்டிகள், இரவு 7:00 மணிக்கு, கிறிஸ்துமஸ் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
* தாராபுரம், சர்ச் ரோட்டில் உள்ள, புனித ஞானபிரகாசியார் ஆலயத்தில், நடந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு, பங்கு தந்தை ஜோசப் தன்ராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், இயேசு
கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த குடிலில், இயேசு கிறிஸ்துவின் சொரூபத்தை வைத்து ஜெபம் செய்யப்பட்டது. கூட்டுபாடலுடன் சிறப்பு ஆராதனை நடந்தது.
இதேபோல், உடுமலை ரோட்டில் உள்ள, சி.எஸ்.ஐ., சர்ச்சிலும், கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
* கிருஷ்ணகிரி: கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு, நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கேக் வெட்டி, கிறிஸ்தவர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், பங்குத்தந்தை சூசை தலைமையில், நள்ளிரவு, 12:00 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதையொட்டி, தேவாலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசுவின் பிறப்பை உணர்த்தும் வகையில், குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இயேசுவின் பிறப்பு குறித்த பாடல்கள் பாடப்பட்டன. கிறிஸ்தவர்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் கிருஷ்ணகிரி சி.எஸ்.ஐ., ஐ.இ.எல்.சி., ஆகிய
ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
* தர்மபுரி பென்னாகரம் சாலையில் உள்ள ஆர்.சி., சர்ச்சில், நேற்று முன்தினம் (டிசம்., 24ல்)நள்ளிரவு, 12:00 மணிக்கு நடந்த சிறப்பு பிரார்த்தனைக்கு, தர்மபுரி மறை மாவட்ட பேராயர் லாரன்ஸ்பயஸ் தலைமை வகித்தார். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த சிறுவர்கள், ஆடல், பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
*நாமக்கல்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் அசெம்பிளி ஆப் காட் சபை மற்றும் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
* நாமக்கல் - சேலம் சாலை, அசெம்பிளி ஆப் காட் சபையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. தலைமை போதகர் நாதன் தலைமை வகித்தார். அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
தொடர்ந்து இயேசு பிறப்பு குறித்து சிறுவர், சிறுமியர் நாடகம் நடத்தப்பட்டது. காலை, 8:00 மணிவரை நடந்த சிறப்பு ஆராதனையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
* நாமக்கல் - திருச்சி சாலை, கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் நேற்று முன்தினம் (டிசம்., 24ல்) இரவு, மெட்டாலா லொயோலா கல்லூரி லாரன்ஸ், சிவகங்கை பிரிட்டோ ஆகியோர் கிறுஸ்துமஸ் நிகழ்ச்சி நடத்தினர். நேற்று (டிசம்., 25ல்) அதிகாலை, 4:00 மணிக்கு துவங்கிய பெருவிழா திருப்பலி நிகழ்ச்சிக்கு, பங்குத் தந்தை ஜான்அல்போன்ஸ், உதவி பங்குத் தந்தை அருள்சுந்தர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாலை, கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நடந்தது.
* சேலம்: தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனை, திருப்பலியில், திரளானோர் பங்கேற்றனர்.கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நேற்று முன்தினம் (டிசம்., 24ல்) நள்ளிரவில், சேலம், குழந்தை இயேசு பேராலயத்தில், ஆயர் சிங்கராயன் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
தொடர்ந்து, பங்குத்தந்தைகள், போதகர்கள், இயேசுவை கையில் ஏந்தியபடி வந்தனர். அங்குள்ள குடிலில் வைத்து, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின், கேக் வெட்டி ஒருவருக் கொருவர் வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், பழைய நிலைக்கு திரும்ப, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நேற்று (டிசம்., 24ல்) காலை, பங்குத்தந்தை ஜான் ஜோசப் தலைமையில், திருப்பலி நடந்தது.
அதேபோல், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார், அழகாபுரம் மிக்கேல் அதிதூதர், சூரமங்கலம் இருதய ஆண்டவர், செவ்வாய்ப்பேட்டை ஜெயராக்கினி, கலெக்டர் அலுவலகம்
அருகேவுள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர், அஸ்தம்பட்டி இமானுவேல், ஜங்ஷன் தேவாலயங் களில் நடந்த பிரார்த்தனை, திருப்பலிகளில் திரளானோர் பங்கேற்று, ஒருவருக்கொருவர்
வாழ்த்துகளை தெரிவித்து, கேக்குகளை பரிமாறி, கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலா கலமாக கொண்டாடினர். மேலும், சேலம் மாவட்டத்தில், மேட்டூர், ஏற்காடு, ஓமலூர், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி என, புறநகரிலுள்ள, 45 தேவாலயங்களில், கிறிஸ்துமஸ் பிரார்த்தனை, திருப்பலி நடந்தது.