பதிவு செய்த நாள்
26
டிச
2018
03:12
காஞ்சிபுரம்: திருவள்ளூர் மாவட்டங்களில், பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் விழா நேற்று (டிசம்., 25ல்) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருப்போரூர் அடுத்த, கோவளம் கார்மேல் மாதா ஆலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவ பிறப்பு பாடல்கள் பாடினர்.இயேசு கிறிஸ்து பிறப்பின் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதே போன்று, திருப்போரூர்,
கண்ணகப்பட்டு, தண்டலம், கேளம்பாக்கம், கரும்பாக்கம், மானாம்பதி உட்பட அனைத்து தேவாலயங்களிலும், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் மற்றும் கொத்திமங்கலம், முடையூர், நெரும்பூர், வல்லிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சகாய மாதா ஆலயம், சி.எஸ்.ஐ., ஆலயம், பெந்தகோஸ்தே ஆலயங்களில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
* காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், மரிய அக்ஸீலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடந்த விழாவில் தனியார் நிறுவன மேலாளர் ஜோ கெனட், சங்கரா கலை கல்லூரி முதல்வர்
வெங்கடேசன், கீழச்சேரி கிறிஸ்து அரசர் கல்லூரி முதல்வர் அருட்பணி அந்தோனி செபாஸ்டியன், சென்னை, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முனிருதின் ஷெரீப், ஆகியோர் கிறிஸ்துமஸ் விழா குறித்து விளக்கவுரையாற்றினர்.
காஞ்சிபுரம், தூய இருதய அன்னை தேவாலயத்தில் நடந்த விழாவிற்கு, பங்கு தந்தை திருப்பலி சிலியோன் தலைமை வகித்தார். இங்கு கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், இந்துக்களும் பிரார்த்தனை கூட்டத்திலும், குடிலில் அமைக்கப்பட்டிருந்த குழந்தை ஏசுவுக்கு மலர் வைத்தும் வழிபட்டனர்.
* செங்கல்பட்டு: செங்கல்பட்டு, புனித சூசையப்பர் ஆலயத்தில், நள்ளிரவு, 12:00 மணிக்கு, செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். சிறப்பு திருப்பலி உட்பட, பல்வேறு பிரார்த்தனைகள் நடந்தன.
செங்கல்பட்டு, சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.மாமல்லபுரம்: மாமல்லபுரம், கல்பாக்கம் நகரியம், கூவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, தேவாலயங்களில், நேற்று (டிசம்., 25ல்), சிறப்பு வழிபாடு நடந்தது.
* திருத்தணி: திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., தூய மத்தேயு ஆலயத்தில், நேற்று(டிசம்., 25ல்), கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி, அதிகாலை, 4:00 மணி முதல், காலை, 10:30 மணி வரை 1,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து, குழந்தைகளுடன் வந்து, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.மாலை, 3:00 மணிக்கு, ஆலய நிர்வாகத்தின் சார்பில், ஏழை குழந்தைகள் மற்றும் தொழுநோயாளிகளுக்கு இலவச சீருடை, கேக் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
* கடலூர்,:கடலூர் ஒயாசிஸ் மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.தொண்டு நிறுவனத் தலைவர் எப்சியா தவராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா, கீழ் கட்டளை எல்ஷடாய் மிஷனை சேர்ந்த ஜான் டேனியல் ஆகியோர் பேசினர். மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துணைத் தலைவர் புளோரா தவராஜ் நன்றி
கூறினார்.